சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரண்டு போனது.
மாற்று ஏற்பாடாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பம்பு செட்டுகள், நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகள், போரூர் ஏரி, நெய்வேலி சுரங்கங்களில் இருந்து கிடைத்த நீர்தான் சென்னைக்கு வாசிகளின் தண்ணீர் தாகத்தை போக்கியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை மாநகர பகுதிகள் மட்டுமல்லாது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 13 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 12, புழல் 35, செம்பரம்பாக்கம் 6 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முற்றிலுமாக வறண்டு போன சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளுக்கும் நீர் வர தொடங்கி உள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக எதிர்பார்த்த அளவு நீர் இல்லாத இந்த 4 ஏரிகளிலும் தற்போது மழை நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. பூண்டி 300 மில்லியன் கனஅடி, புழல் 347 மில்லியன் கன அடி, சோழவரம் 91 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் 308 மில்லியன் கன அடி ஆக 4 ஏரிகளிலும் சேர்த்து 1,046 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 4 ஏரிகளிலும் சேர்த்து 1.318 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.
ஏரிகளில் படிப்படியாக நீர் மட்டம் நிரம்பி வருவதால் அங்கு இருந்து குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 9 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 23 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 52 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் வினாடிக்கு புழல் ஏரிக்கு 69 கன அடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 87 கன அடி வீதமும் நீர் வந்து கொண்டு இருக்கிறது.