திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் நகராட்சி தலைவர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, லால்குடி எம்.எல்.ஏ செளந்தரபாண்டியன் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் முக்கிய விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சமூகவலைத்தளப் பக்கத்தில், கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்த பேஸ்புக் பக்கத்தில், லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் பரபரப்பை ஏற்படுத்தும் விதமான கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு பணிவான வேண்டுகோள். 11-10-2021 அன்று நான் தங்களிடம் லால்குடி நகராட்சிக்கு பாதாளச் சாக்கடை திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்பதனை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். நிறைவேற்றித் தருவீர்களா?" என கேள்வி எழுப்பி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் தனது தொகுதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாததற்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில், "லால்குடி சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டதால் தொகுதி காலியாக உள்ளது" என பதிவிட்டிருந்தார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அமைச்சரிடம் கொடுத்த கோரிக்கையை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு பதிவை போட்டுள்ளார்.இந்த விவகாரம் திருச்சி திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இந்த கமெண்ட் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த கமெண்ட் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“