Lalitha Jewellery robbery main accused Murugan: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சரண் அடைந்ததைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காலையில் வழக்கம் போல ஊழியர்கள் சென்று கடையைத் திறந்தபோது கடையில் இருந்த தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகைக்கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து நகைகளை கொள்ளையடித்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.13 கோடி என்று லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் 7 தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகனுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் திருவாரூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தியபோது அதிலிருந்த சுரேஷ் என்பவர் தப்பி ஓடினார். இந்த சுரேஷ் முருகனுடைய அக்கா மகன் ஆவார். மற்றொருவரான திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வைத்திருந்த பையில் இருந்து 4.5 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றினர். விசாரணையில் இந்த நகைகள் லலிதா ஜுவல்லரியில் இருந்து கொள்ளையடிக்கட்டவை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும அவருடைய அக்கா கனகவள்ளி மகன் சுரேஷை போலீசார் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீதிமன்றத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி சரண் அடைந்தார். இவரைத் தொடர்ந்து முருகன் பெங்களூருவில் உள்ள நகர்ப்புற நீதிமன்றத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி சரண் அடைந்தார்.
இதில் முருகனின் அக்கா கனகவள்ளியின் மகனான சுரேஷை போலீசார் விசாரணைக்காக 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பெங்களூரு போலீசார், வேறொரு நகைத் திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக முருகனை அழைத்துக்கொண்டு திருச்சி வந்து விசாரணை நடத்தினர். திருச்சி கல்லணை சாலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முருகன் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ நகைகளைத் தோண்டி எடுத்து கைப்பற்றினர். அந்த நகைகளை எடுத்துக்கொண்டு பெங்களூர் போலீசார் பெங்களூரு செல்ல முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி தனிப்படை போலீசார் பெரம்பலூர் அருகே பெங்களூரு போலீசாரிடம் விவரத்தை கூறினர். இதையடுத்து, லலிதா ஜுவல்லரி நகைக்கடை மேலாளர் மூலம் அந்த நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தான் என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் 12 கிலோ நகைகளும் பெங்களூரு நீத்மன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொள்ளை சம்பத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முருகன் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடைக்கு ஒரு வாரம் குடும்பத்துடன் சென்று நோட்டமிட்டு வந்துள்ளான். அதிலும் இரவு நேரங்களில்தான் அதிகமாக சென்று வதுள்ளான். அபோது நகைக்கடையில் எங்கெங்கு அறைகள் உள்ளன. சுவரில் எந்த இடத்தில் துளையிட்டால் எந்த அறைக்கு செல்ல முடியும்? அங்கிருந்து எப்படி வெளியே வருவது என அனைத்தையும் நோட்டமிட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து, கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்து கொள்ளையடித்துள்ளான். மேலும், இந்த கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் போட்டு கொடுத்ததால் தனக்கு அதிகபட்ச நகைகளை பங்காக வழங்க வேண்டும் என்று கூறி, அதன்படி கொள்ளைக்குப் பிறகு அதிக நகைகளையும் பெற்றுள்ளான்.
நகைக்கடையின் சுவரில் துளையிட்டது பற்றி கொள்ளையர்கள் கூறுகையில், லலிதா ஜுவல்லரியில் ஒரே நாளில் சுவரில் துளையிடவில்லை என்றும் சத்தமில்லாமல் சுவரை துளையிட்டு முடிக்க 4 நாட்கள் தேவைப்பட்டது என்றும் துளையிடப்பட்ட பகுதிக்கு வெளியே ஒரு சுவர் இருந்ததால் அதைப் பற்றி யாரும் கவனிக்கவில்லை என்று இந்த கொள்ளை சம்பத்தில் கைதாகியுள்ள கணேசன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நகைக்கடைக்குள் முருகனும் கணேசனும் சென்று நகைகளை கொள்ளையடிக்கையில் சுரேஷ் கும்பல் வெளியே இருந்து யாராவது ஆட்கள் வருகிறார்களா என்று கண்காணித்துள்ளனர்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளைபோன சுமார் 28 கிலோ எடைகொண்ட தங்கம், வைரம், பிளாட்டினம் நகையில் இதுவரை 22.200 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
திருச்சி தனிப்படை போலீசார் விரைவில் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அப்படி விசாரிக்கும்போது இந்த கொள்ளை சம்பவம் பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரை சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 950 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
மேலும், போலீசார் மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த தகவலின் பேரில், மதுரை, வாடிப்பட்டி குருவித்துறை அம்பலகாரத்தெருவைச் சேர்ந்த சி.கணேசன்(35) என்பவரிடம் இருந்து 6 கிலோ மற்றும் 230 கிராம் நகைகளை போலீசார் நேற்று மீட்டனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.30 கோடி என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளியான சுரேஷிடம் மேலும் விசாரணை நடத்தினால், இன்னும் நகைகள் மீட்கப்படலாம் என்று தெரிகிறது. அதே போல், முருகன் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் வங்களின் சுவர்களை துளையிட்டு கொள்ளையடித்த வழக்குகள் இருப்பதால், அண்மையில், திருச்சி நெ 1 டோல்கேட் பகுதியில் நடைபெற்ற வங்கி லாக்கர் நகைகள் திருட்டு சம்பவத்திலும் முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளயில் முக்கிய குற்றவாளியான முருகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தும்போது மேலும் பல கொள்ளை சம்பங்களைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.