திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை: முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

Lalitha jewellery robbery main accused surrendered: தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியா திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சுரேஷ் வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

By: Updated: October 10, 2019, 04:47:08 PM

Lalitha jewellery robbery main accused surrendered: தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சுரேஷ் வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2 ஆம் தேதி இரவு சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த 2 பேர் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் சிங்கம் காளை முகமூடி அணிந்திருந்ததால் கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து திருச்சி மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்.

பின்னர், இந்த கொள்ளை சம்பத்தில் திருவாரூரைச் சேர்ந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முருகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. முருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருவாரூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முருகனின் அக்கா கனகவள்ளியின் மகன் சுரேஷ் (30) மற்றும் முருகனின் கூட்டாளியான மணிகண்டனும் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் மணிகண்டன் மட்டும் சிக்கினார். இதில் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். மணிகண்டனிடம் இருந்து போலீசார் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, சுரேஷின் தாய் கனகவள்ளியையும் கைது செய்து நீதிமன்றத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் மணிகண்டன் மற்றும் கனகவள்ளியிடம் நகைகளை கொள்ளையடித்த முருகன் மற்றும் சுரேஷ் எங்கே பதுங்கியுள்ளனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று போலீஸாரின் விசாரணையில் இருவரும் நகைகள் எங்கே இருக்கிறது என்று தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து, முருகனின் அண்ணன் மகன் முரளி, உறவினர்களான பார்த்திபன், பிரதாப், ரகு உள்ளிட்ட பல பேரிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் மூளையாக செயல்பட்ட முருகன் மற்றும் சுரேஷ் ஆந்திரப் பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் ஆந்திரப் பிரதேசம் சென்றும் தங்கள் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

கொள்ளையர்களைப் பற்றி போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள், கொள்ளையடித்த பணத்தில் சினிமா தயாரித்தது தெரியவந்தது. அதோடு இவர்கள், 2008-ம் ஆண்டு முதல் சுரேஷ் மாமா முருகனுடன் சேர்ந்து ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் தப்பியோடி தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சுரேஷ் வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பாபு முன்னிலையில் சரண் அடைந்தார். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

சுரேஷுக்கு முருகன் எங்கே பதுங்கியுள்ள இடம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் எங்கே இருக்கின்றன என்று தெரியும் என காவல்துறை கருதுவதால் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள சுரேஷை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் மேலும் பல கொள்ளை சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரணைடைந்துள்ள சுரேஷ்தான் தனது மாமா முருகன் தயாரித்த ‘மனசவினவ’ மற்றும் ஆத்மா என்ற 2 தெலுங்கு படத்தில் கதாநாயகனான நடித்துள்ளார். இந்த 2 படங்களும் நிதி பிரச்சினையால் இன்னும் வெளியாகவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Lalitha jewellery shop robbery main accused suresh surrendered in court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X