Trichy Lalitha Jewelry theft police inquiry at north Indians: திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகை கடையை நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல திறந்தபோது, கடையைத் திறந்த ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் கீழ் தளத்திலும் மேல் தளத்திலும் இருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை அறிந்தனர். மேலும், கடையின் பின்பக்க சுவர் ஒரு ஆள்நுழையும் அளவுக்கு துளைத்து உடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, லலிதா ஜுவல்லரி நகைக்கடை ஊழியர்கள் கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், உதவி துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வந்து கடையில் பதிவாகியிருந்த கைரேகைப் பதிவுகளை சேகரித்தனர். அதோடு கடையில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு கொள்ளையர்கள் புலி மற்றும் காளை பொம்மை தலைகளை முகமூடியாக அணிந்து நகை கடையில் இருந்த நகைகளைக் கொள்ளையடிப்பது பதிவாகியிருந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில், ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் என 800 நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண் குமார் தெரிவித்தார்.
போலீஸார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் நேற்று முன் தினம் இரவு 2.30 மணி முதல் 4.30 வரை கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் கொள்ளையடிக்கும் சம்பவம் பதிவாகியிருந்தது. ஆனால், அவர்கள் முகத்தை மறைத்திருந்ததால் அவர்கள் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், கொள்ளை நடந்த நேரத்தில் 6 பேர் செக்யூரிட்டிகள் நகைக் கடைக்கு வெளியே காவல் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், நகைக்கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த மெகா கொள்ளை சம்பத்தைக் கேள்விப்பட்டு கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியை திருச்சியில் உள்ள பெரிய நகைக்கடை அதிபர்களும் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசரும் பார்வையிட்டு சென்றனர்.
இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொள்ளையர்கள் பக்கத்து மாவட்டங்களிலும் பதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளதால் தனிப்படை போலீசார் தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் யாரேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியுள்ளனரா என்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் ஒரு தனியார் லாட்ஜில் 5 வட மாநிலத்தவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கே சென்று அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின்போது அதில் அபிஜுடு என்பவர் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது கால் உடைந்தது. இதையடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் விசாரணையில், அவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து போர்வை விற்பனை செய்ய வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனால், போலீஸாருக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதே நேரத்தில் இவர்கள் மீது இதற்கு முன் வழக்குகள் இருப்பதாகவும் அந்த அடிப்படையில் சந்தேகத்தின் பேரில்தான் இவர்களிடம் விசாரித்ததாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றனர். இதனால், கொள்ளையர்களைப் பற்றி எந்த துப்பும் கிடைக்காத நிலையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.