நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நிலம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி நிறுவனம் அறிவித்தது. அதன்படி சிலர் நிலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலத்தை சமன் செய்யும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விவசாய சங்கப் பிரநிதிகள், பொதுமக்கள் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். விழுப்புரம் டிஐஜி, கடலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் இன்று(மார்ச் 10) விவசாய சங்கப் பிரநிதிகளுடன் சென்று நிலம் சமன் செய்யும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இது மக்கள் விரோத செயல் என கண்டனம் தெரிவித்தார். அப்போது டிஐஜி பாண்டியன், கூடுதல் இழப்பீடு பெற ஒப்புக் கொண்டவர்களின் நிலம் மட்டுமே கையகப்படுத்துவதாக கூறினார். தொடர்ந்து எம்.எல்.ஏ பணிகளை நிறுத்தும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம். போராட்டம் நடத்த மாட்டோம். இங்கேயே காத்திருப்போம் எனத் தெரிவித்தார்.
பின்னர் கூட்டம் அதிகரித்ததால் காவல்துறையினர் எம்.எல்.ஏ உடன் வந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழி தேவன், விவசாய சங்கப் பிரநிதிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/