விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்காடு பகுதியில் உள்ள சகாய செல்வம் (34) என்பவரின் பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 24 பாக்கெட் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சகாய செல்வத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, புதுச்சேரி மாநிலம் கொத்தம்புரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் இருந்து இந்த புகையிலை பொருட்களை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சிவகுமாரின் வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
சிவகுமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 110 கிலோ எடை கொண்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சகாய செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி - பாபு ராஜேந்திரன்.