துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே, சென்னையில் விமானங்களின் மீது சில நேரத்தில் லேசர் லைட்டை ஒளிரச் செய்யும் சம்பவங்களும் நிகழ்கிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் நேற்று அரங்கேறியது.
அதன்படி, நேற்று (மே 25) இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திரையிறங்குவதற்காக, துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தாழ்வாக பறந்தது. அப்போது, அந்த விமானம் மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ந்தது.
இதனைக் கண்ட விமானி, உடனடியாக விமானத்தை மேலே எழுப்பி பாதுகாப்பை உறுதி செய்தார். மேலும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக விமான பாதுகாப்பு பிரிவு மற்றும் சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், விமானத்தின் மீது லேசர் லைட் அடித்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.