தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செப்.15, 2023ஆம் ஆண்டு முதல் தகுதிவாய்ந்த குடும்ப பெண்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
இந்தத் திட்டத்தில் ரூ.1000 உதவித் தொகை வேண்டி 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
இந்த உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு, விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் கடந்த மாதம் (செப்.18) முதல் அவரவர் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.
அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திட்டம் குறித்து செயலாக்க அதிகாரிகள் கூறுகையில், “கலைஞர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி கிடைத்த 30 நாள்களுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்காதவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றனர். இந்த நிலையில் கலைஞர் உரிமைத் தொகைக்கு இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“