Aadhaar EB link: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது கால அவகாசம் விடுத்துள்ளனர். இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை 2.34 கோடி எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 33 லட்சம் பேர் இணைக்கவிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலமாக ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்தை பயன்படுத்தி மக்கள் தங்களது மின் இணைப்பு எண், தொலைபேசி எண், இமேஜில் இருக்கும் டெக்ஸ்டை (captcha) டைப் செய்து, பதிவு செய்யலாம்.
அடுத்த கட்டமாக, நீங்கள் பதிவு செய்த மின்இணைப்புக்கான நுகர்வோர் பெயர் திரையில் தெரியும்போது, அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு இருப்பவரா என்பதை பதிவு செய்யவேண்டும். இதில் தேர்வு செய்து பதிவிட்ட பிறகு, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர், ஆதார் எண்ணுடன் நீங்கள் இணைத்துள்ள கைப்பேசி எண்ணிற்கு OTP வரும். அதனை பதிவு செய்தால் ஆதார் எண் மின் இணைப்புடன் இணைக்கப்படும்.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக டிசம்பர் 31-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இந்தப்பணிக்கான கால அவகாசத்தை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தற்போது இருக்கக்கூடிய 2 கோடி 67 லட்சம் நுகர்வோர்களில் ஏறத்தாழ 90.69% நுகர்வோர் இன்று காலை வரை இணைந்திருக்கிறார்கள். மீதம் இருக்கக்கூடிய 9.31% இணைக்கவேண்டிய நிலுவை இருக்கிறது.
குறிப்பாக வீடுகளை பொறுத்தவரை, 2 கோடி 32 லட்சம் நுகர்வோர்களில் 2 கோடி 17 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். இதில் 15 லட்சம் நுகர்வோர் இணைக்கவேண்டிய நிலுவை இருக்கிறது.
ஆகையால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது", என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.