ஒரு வார இடைவெளிக்குப் பிறகு, ‘மாஸ்க்’ சகிதமாக வந்த அரட்டை அரங்கசாமி, சமூக இடைவெளியைக் கடைபிடித்து உட்கார்ந்தார்.
‘ரம்ஜானுக்கு முன்பே எதிர்பார்த்தோமே! எங்கும் பிரியாணி விருந்தில் சிக்கிக் கொண்டீரா?’ என சும்மா கேட்டு வைத்தோம்.
‘பொதுமுடக்கம் காரணமாக, இப்போது கலகலப்பையும், கொண்டாட்டத்தையும் அதிகம் எதிர்பார்க்க முடியாதல்லவா?’ என்ற அரட்டையார், ‘திமுக அனுதாபிகளுக்கு இந்த ரம்ஜானையொட்டி ஒரு ஆதங்கம்!’ என செய்திக்குத் தாவினார்.
‘சொல்லும்... சொல்லும்!’
‘சிறுபான்மை சமூகப் பண்டிகைகளுக்கு எங்கு இருந்து வாழ்த்து வருகிறதோ, இல்லையோ... கோபாலபுரத்தில் இருந்து முதல் வாழ்த்து வந்துவிடுவதுதான் காலம்காலமான நடைமுறை. இந்த முறையும் ரம்ஜானுக்கு முன்தினமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டார். திமுக ஆட்சிக் காலங்களில் இஸ்லாமியர்கள் மேம்பாட்டுக்கு செய்த சாதனைகளை குறிப்பிட்டு வெளியான அந்த அறிக்கை, திமுக.வின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியானது. ஆனால் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட முகநூல், ட்விட்டர் பக்கங்களில் அந்த அறிக்கை இல்லை’
‘வழக்கமான நடைமுறை என்ன?’
‘மு.க.ஸ்டாலின் விடுகிற எந்த அறிக்கையையும் அவரது முகநூல், ட்விட்டர் தளங்கள் ‘மிஸ்’ செய்வதே இல்லை. திமுக.வின் முக்கியப் பிரமுகர்கள், இணையதள உடன்பிறப்புகள் பலரும் மு.க.ஸ்டாலின் பெயரில் இயங்குகிற முகநூல், ட்விட்டர் பக்கங்களையே அதிகமாக பின் தொடர்கிறார்கள். தவிர, திமுக.வின் அதிகாரபூர்வ பக்கத்தில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியினர் செய்கிற கொரோனா உதவிகளை வரிசையாக பதிவிட்டு வருகிறார்கள். எனவே ஸ்டாலினின் ரம்ஜான் வாழ்த்தை அதில் சுலபத்தில் கட்சிக்காரர்களால் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நாளிதழ்களையும் ஏனோ இந்த அறிக்கை அதிகம் ‘ரீச்’ ஆகவில்லை.’
‘இதற்கெல்லாம் என்ன காரணம்?’
‘2014-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி மு.க.ஸ்டாலினின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியானது. அனைவரும் அதை அதிசயமாக பார்த்தனர். ‘இந்துப் பண்டிகைகளுக்கு திமுக வாழ்த்து சொல்வதில்லை’ என்கிற புகாரை துடைப்பதற்காக மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியிருப்பதாக சிலர் புளகாங்கிதப்பட்டனர். ஆனால் மறுநாள் திமுக சார்பில் வெளியான அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என ‘ஜகா’ வாங்கியது திமுக. அதேபோல இப்போது ரம்ஜான் வாழ்த்தை அவரது தனிப்பட்ட தளத்தில் பதிவு செய்யாதது ‘அட்மின்’ கவனமின்மையாக இருக்கலாம்!’
‘நம்புகிற மாதிரி சொல்லும் அரட்டையாரே... பிரசாந்த் கிஷோர் டீம் இணைந்த பிறகும் அப்படி கவனமின்மை இருக்குமா?’
‘இதே கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பி, திமுக.வை குடைகிறார்கள். பி.கே. ( பிரசாந்த் கிஷோர்) டீமின் ஒருவகை உத்தி இது என்போரும் இருக்கிறார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன் ரெட்டி ஆகியோருக்கு ‘இந்து எதிர்ப்பாளர்’ என்கிற இமேஜ் ஓவராக படியாமல் பார்த்துக் கொண்டதுதான் பி.கே.வின் முக்கிய வியூகமே! அதேபோல இங்கும் திமுக.வை கொஞ்சம் கொஞ்சமாக கலர் மாற்றும் முயற்சிகள் நடக்கிறதோ? என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக திமுக இது பற்றி எந்த கமெண்டும் சொல்லிக் கொள்ளவில்லை.’
‘ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி விவகாரம் ஓய்ந்ததா?’
‘இந்தப் பிரச்னை முழுக்க உயர் நீதிமன்றத்தில் அணிவகுக்கிறது. கிரிராஜனை செயலாளராகக் கொண்ட திமுக சட்டத்துறைக்கு இதில் பெரிய ‘அப்ளாஷ்’ கிடைத்திருக்கிறது. ஆலந்தூர் பாரதியை மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவதாக தெரிந்து, அந்த அதிகாலை நேரத்திலும் அங்கு வழக்கறிஞர்கள் திரண்டுவிட்டனர். 70 வயதைக் கடந்த பாரதிக்கு, இது நம்பிக்கையூட்டியது. அதேபோல வன்கொடுமை வழக்கில் கைதான ஒருவரை அடுத்த 5 மணி நேரத்தில் ஜாமீனில் வெளியே கொண்டு வந்ததையும் பெரிய சாதனையாக நினைக்கிறார்கள் திமுக.வினர். எனினும் அங்கே நின்ற நிர்வாகிகளுக்கு சில வருத்தங்கள்!’
‘என்ன?’
‘திமுக.வில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் பாரதி. ஜெயலலிதா மீதான டான்ஸி வழக்கு முதல் இன்று வரை ஆளும்கட்சிக்கு எதிரான பல வழக்குகளில் புகார்தாரராக இருப்பவர்! அவர் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த எழும்பூர் கமிஷனர் அலுவலகத்திற்கும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் செனடாப் சாலை இல்லத்திற்கும் இடைப்பட்ட பயண நேரம் 20 நிமிடம்தான். அதிகாலை முதல் மதியம் வரை நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்கு இடையே, ஸ்டாலின் ஒருமுறை அங்கு வந்துவிட்டுப் போயிருக்க வேண்டாமா? என்பதுதான் நிர்வாகிகள் சிலரது வருத்தம்! இளைஞரணிச் செயலாளரான உதயநிதியாவது வந்திருக்கலாம். நேரில் வந்தத் தலைவர்கள் என்றால், கனிமொழியும் டி.ஆர்.பாலுவும்தான்!’
‘வேலை நடப்பதுதானே முக்கியம். தலைவர் முயற்சி இல்லாமல் இத்தனையும் நடந்திருக்காது அல்லவா?’
‘அது நிஜம்! ஜாமீனில் ரிலீஸான பாரதி, நேராக ஸ்டாலின் இல்லத்திற்கே சென்று நன்றி தெரிவித்து வாழ்த்தும் பெற்றார். ஆனாலும் இது போன்ற நிகழ்வுகளில் சில ஒப்பீடுகளை தவிர்க்க முடியாது. இந்நேரம் கலைஞர் உயிரோடு இருந்து, அவரது சகா கைது செய்யப்பட்டிருந்தால் கலைஞர் வராமல் இருந்திருப்பாரா? 2001-ல் கலைஞர் கைதின் போதும் தளபதி இதேபோல ஸ்பாட்டுக்கு வராமல் தவிர்த்தாரே? என்கிற ரீதியில் விமர்சனங்கள் வருகின்றன.’
‘ஆளும்கட்சியில் என்ன விசேஷம்?’
‘ஒரேயடியாக இந்துத்வா ஆதரவு நிலைப்பாடு காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்தது தெரியும். அதன்பிறகு ரொம்பவும் சைலண்ட் ஆகிவிட்ட ராஜேந்திர பாலாஜி, இப்போது மீண்டும் மா.செ. பதவியை கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார்.’
‘சாத்தியமா?’
‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான மூத்த அமைச்சர்களை சந்தித்து, இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்திருக்கிறார். குறிப்பாக கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்ததுடன், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிலும் அவருடன் இணைந்து கலந்துகொண்டார். விருதுநகரை கட்சி அமைப்பு ரீதியாக இரு மாவட்டங்களாகப் பிரித்து, ஒன்றுக்கு ராஜேந்திர பாலாஜியையும் மற்றொன்றுக்கு அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜனையும் மா.செ. ஆக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்!’
‘லாக்டவுன் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் புதிர் போட்டு விளையாடுகிறாரே?’
‘ஒரு மூத்த அரசியல்வாதியை குறிப்பிட்டு, அவரை மட்டும் ஒருபோதும் நம்பாதீர்கள் என முன்பு ஒருமுறை திமுக தலைவர் கலைஞர் தன்னிடம் தனியாகக் கூறியதாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ‘அந்த மூத்த அரசியல்வாதியை யூகியுங்கள்’ என ‘குவிஸ்’-ஸும் வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பாமக எதிர்ப்பாளர்கள் பலர் உள்ளே புகுந்து, ‘அது நீங்களேதான்யா’ என மருத்துவரைக் கலாய்க்கிறார்கள்.’
‘உண்மையில் அந்த மூத்த அரசியல்வாதி யாராம்?’
‘முக்கனிகளில் ஒன்றுக்கு ஃபேமஸான ஊரை பெயரில் கொண்டிருப்பவர் அவர்! அதிமுக, பிறகு தனிக்கட்சி, பாமக, தேமுதிக, மீண்டும் அதிமுக என வலம் வந்தவர்! கலைஞருக்கு ஆரம்பக் கால அரசியலில் குடைச்சல் கொடுத்த அறிவுஜீவிகளில் அவரும் ஒருவர். ராமதாஸுக்கும் அவ்வப்போது சமூக ரீதியான டார்ச்சர்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்..!’
‘போதும் சாமி! புதிருக்கு விடை கேட்டால், மீண்டும் புதிரா? அந்த நபர் மீது ராமதாஸுக்கு இப்போ என்ன கோபம் என்பதை சொல்லும்!’
‘ராமதாஸ் புதிர் போட்டதற்கு முன் தினமான மே 25-ம் தேதி வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அன்று, ‘பெண்களின் பாதுகாவலராக இருந்தவர் குரு’ என்கிற ரீதியில் முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்களைக் கொண்டு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினர். இந்த ட்ரெண்டிங்கின் நோக்கமே பாமக.வை சீண்டுவதுதான் என்றும், அதன் பின்னணியில் கலைஞர் குறிப்பிட்ட அறிவுஜீவி அரசியல்வாதி இருந்ததாகவும் தகவல்!’
‘புரியவில்லையே! குருவுக்கு புகழாரம் சூட்டுவது எப்படி பாமக.வை சீண்டுவது ஆகும்?’
‘குரு மறைவுக்கு பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும், பாமக.வுக்கு ஏழாம் பொருத்தம் ஆனது. குரு குடும்பத்தினர் சிலர் தங்களுக்கு என்று ஒரு ஆதரவு வட்டத்தையும் உருவாக்கினர். பாமக ஆதரவு இல்லாமல் குருவை உயர்த்திப் பிடிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியே அந்த ட்ரெண்டிங்! ஒருவகையில் இது பாமக.வை சீண்டுகிற முயற்சியே! இதற்கு எதிர்வினையாகவே மருத்துவரின் ட்வீட் அமைந்ததாக குறிப்பிடுகிறார்கள்’
‘குரு நினைவு நாளில் ராமதாஸும் மரியாதை செலுத்தினாரே?’
‘தைலாபுரம் அரசியல் பயிலரங்கில் குருவின் படத்தை வைத்து, மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார் டாக்டர் ராமதாஸ். இது தொடர்பான படங்களை மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அங்கேயும் பலர் கொந்தளித்துத் தீர்த்தனர். ‘பயிரலரங்கு வாசல் அருகே ஒரு அறையின் வாயிற்படிகளில் குருவின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியது என்ன நியாயம்? படத்தை வைப்பதற்கு அங்கு ஒரு மேஜை கூடவா கிடைக்கவில்லை?’ என்பது கொந்தளித்தவர்களின் வாதம்!’
‘பாமக-வின் வாதம்?’
‘பாமக இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக இடத்தை தேர்வு செய்ததாக குறிப்பிடுகிறார்கள். குருவால் பாமக வளர்ந்ததும் நிஜம், குருவை எம்.எல்.ஏ ஆக்கி பாமக அங்கீகரித்ததும் நிஜம். அவரது மறைவுக்கு பிறகு சர்ச்சைகளை தவிர்த்தல் அனைவருக்கும் நலம்’ என்ற அரட்டையார், தொடர்ந்து திருமாவளவனுக்கு எதிராக புதிய தமிழகம் தரப்பு கிளப்பும் அனலை அள்ளிவிட்டார்.
‘புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, திமுக வாரிசுகளுக்கு எதிராக யுத்தம் நடத்துவது குறித்து ஐஇ தமிழில் செய்தி பார்த்தேன். அதே யுத்தத்தை இப்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகவும் ஷ்யாம் நடத்துகிறார்.’
‘அங்கே என்ன பிரச்னை?’
‘வி.பி.துரைசாமி பாஜக.வில் இணைந்தது, வன்கொடுமைச் சட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது புகார் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, ஒரு அறிக்கை விட்டார் திருமாவளவன். அதில், ‘சிறுதாவூர் பங்களாவும் பஞ்சமி நிலத்தில்தான் உள்ளதென குற்றச்சாட்டு உள்ளதே; அது பாஜகவுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியுமெனில், அதனையும் மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க பாஜக போராடுமா? அதன்மூலம்
தலித் மக்கள் மீதான தமது அக்கறையை உறுதிப் படுத்துமா?‘ என கேள்வி எழுப்பினார் திருமா.’
‘லாஜிக்கான கேள்வி’
‘திருமாவின் இந்தக் கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்த ஷ்யாம், ‘BJP போராடுவது இருக்கட்டும் திருமா சார். 2006-ல் சிறுதாவூர் பிரச்சனையை Dr Krishnasamy
கையில் எடுத்தபோது ஓடோடி வந்து அன்றும் ஜெயாவிற்கு ‘வேலை’ பார்த்தது நீங்க தானே? இப்போ பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக சமூக மக்களின் நிலத்தின் மீது திடீர் அக்கறையோ?’ என காட்டம் காட்டியிருக்கிறார். கூடவே, அன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திருமா விடுத்த அறிக்கைகளையும், அறிவாலயம் மற்றும் முரசொலி நிலங்கள் குறித்து அன்று திருமா கிளப்பிய சர்ச்சைப் பதிவுகளையும் தேடிப் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறார் ஷ்யாம்’
‘ஓ..!’
‘முத்தாய்ப்பாக, ‘சிறுதாவூர் பிரச்சனை வந்தால், அது பஞ்சமி நிலம் அல்ல என ஜெயாவிற்கு முட்டு குடுத்து முரசொலி பிரச்சனையை தூண்டுவது... முரசொலி நில பிரச்சனையில் திமுகவிற்கு முட்டு குடுத்து, சிறுதாவூர் நில பிரச்சனையை தூண்டுவது... எதற்கு இந்த அரசியல்? பேசாமலாவது இருக்கலாமே?’ என திருமாவை கடுமையாக ‘கார்னர்’ செய்திருக்கிறார் ஷ்யாம். நிச்சயம் சிறுத்தைகளை திணறவைக்கும் கேள்விகள் இவை!’
‘ஷ்யாம் நேரடி அரசியலுக்கு வந்துவிட்டாரா?’
‘டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பக்கபலமாக கட்சியை வழிநடத்த முழுமையாக தயாராகிவிட்டார் ஷ்யாம். கோவையில் கிருஷ்ணசாமியின் சொந்தக் கிளினிக்கில் மருத்துவராக இருக்கும் ஷ்யாம், அங்கு, ‘தாமரை வேர்ல்ட் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளியையும் நடத்துகிறார். பொதுமுடக்கத்தை முன்னிட்டு அந்தப் பள்ளியில், முதல் ‘டேர்ம்’ டியூஷன் கட்டணத்தை ரத்து செய்திருக்கிறார் இவர். இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘கழகத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் இதைப் போல செய்வீர்களா?’ என சூசகமாகக் கேட்கிறார் ஷ்யாம்!’
‘தேர்ந்த அரசியல்வாதிதான் போல!’
‘தமிழகம் தவிர்க்க இயலாத ஒரு அரசியல் தலைவரின் குரல், சமீப நாட்களாக சற்றே ‘டெசிபல்’ குறைந்து ஒலிக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-தான் அந்தத் தலைவர்! 75 வயதைக் கடந்த வைகோ, அண்மை ஆண்டுகளாக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டிய சூழல்களை எதிர்கொண்டு வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக மே 22-ம் தேதி மக்கள் கண்காணிப்பகம் ஏற்பாடு செய்த இணையதள நேரலையில் பேசினார் வைகோ. பேச்சில், பழைய வேகமும் அழுத்தமும் மிஸ்ஸிங்’
வைகோ, எப்படி இருக்கிறார்?
‘என்னவாயிற்று?’
‘அதிக ஓசையுடன் பேசுவதை தவிர்ப்பது நலம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர். அண்மையில் ஐஇ தமிழ் முகநூல் நேரலையில் பேசிய நாஞ்சில் சம்பத், ‘வைகோவின் உடல்நிலை பழைய மாதிரி இல்லை என கேள்விப்படுகிறேன். அவர் பூரண நலம் பெற்று திரும்பவேண்டும் என விரும்புகிறேன்’ என குறிப்பிட்டத்தை இங்கு நினைவு கூறவேண்டும். எனினும் கட்சியினருடன் தொடர்பில் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் அண்மையில் ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சி வீடியோ கானஃபரன்ஸிலும் கலந்து கொண்டார்’
‘ஓ.கே.! அடுத்து?’
‘முன்பெல்லாம் காங்கிரஸில் ஒரு தரப்பு திமுக.வுக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பு அதிமுக.வுக்கு ஆதரவாகவும் வெளிப்படையாகவே இயங்குவார்கள். அண்மைக் காலமாக அப்படி யாரும் இல்லாத குறையை, நடிகை குஷ்பூ போக்குவதாக கதர்காரர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்’
‘இது என்ன பஞ்சாயத்து?’
‘சின்னத்திரையில் இப்போது பிஸியான பிரபலங்களில் ஒருவர் குஷ்பூ. பொதுமுடக்கத்தை முன்னிட்டு முடங்கிய சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க வைப்பதில் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் குஷ்பூ. இதற்காக சின்னத்திரை குழுவினருடன் அடுத்தடுத்து சில முறை தலைமைச் செயலகம் சென்று, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜை சந்தித்து திரும்பியிருக்கிறார். இது பணி ரீதியிலான சந்திப்பு என்றாலும், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பூ இந்தச் சந்திப்புகளில் தமிழக அரசை மனமுவந்து பாராட்டுவது கூர்மையாக கவனிக்கப்படுகிறது.’
‘அதிமுக.வை பாராட்டவில்லையே... அரசைத்தானே பாராட்டுகிறார்!’
‘தமிழகத்தில் திமுக கூட்டணியினர் மொத்தமாக அரசை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போது, ‘கொரோனா பிரச்னையை முதல்வர் எடப்பாடி அரசு சரியாக கையாள்கிறது’ என்கிற ரீதியில் குஷ்பூ பதிவு செய்திருக்கிறார். இதை சின்னத்திரை சங்கத்தினரின் பாராட்டு என எடுத்துக் கொள்வதா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பாராட்டு? என எடுத்துக் கொள்வதா? என்பதுதான் கேள்வி. 26-ம் தேதி மீண்டும் தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த குஷ்பூ, ‘அரசின் உத்தரவுகளை சின்னத்திரை சங்கத்தினர் 100 சதவிகிதம் கடைபிடிப்போம்’ என உறுதி கொடுத்தார். அதிமுக.வினர் மேடை போட்டு பேசும்போது, ‘குஷ்பூவே பாராட்டினார்’ என சொல்வார்கள்தானே!’ என்ற அரட்டையார், அலுவலகத்தில் டீ ஆர்டர் செய்து அருந்திவிட்டு இடத்தைக் காலி செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.