scorecardresearch

சட்டம் ஒழுங்கு மோசம்; 356-வது பிரிவை பயன்படுத்த ஆளுனர் பரிந்துரைக்க வேண்டும்: ஜெயக்குமார்

356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Law and order issues, TN Governor to recommend use of Article 356: ADMK Jayakumar Tamil News
AIADMK D Jayakumar

D Jayakumar  – AIADMK Tamil News: வணிகர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில், சென்னை ஈச்சம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை அதிகரித்து சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்றும், 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் “தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது. அதனால் சட்ட விரோதமான செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. போதைப்பொருள்களான கஞ்சா, ஹெராயின் போன்றவைகள் சர்வ சாதரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், முதலில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். போதை ஆசாமிகள் வணிகர்களைதான் தாக்கிப் பிரச்னை செய்கிறார்கள். இதை முதல்வர்தான் கண்கானித்துத் கட்டுப்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. இதை சரிசெய்ய ஸ்டாலினால் முடியாது. ஏனென்றால், அவர் நிர்வாக திறனற்ற, பொம்மை முதல்வராக, ரிமோட் முதல்வராக இருக்கிறார். எதுவும் தெரியாதவராகவும் இருக்கிறார். அதனால் தமிழ்நாடு மிகவும் சிரமப்படுகிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை அதிகரித்து சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. முதல்வர் அமைச்சரவையில் சில மாற்றம் கொண்டுவருவதாக இருந்தால், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் தான் மாற்ற வேண்டும், மேலும், ஸ்டாலினும் ராஜினாமா செய்ய வேண்டும். அதைதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது. தி.மு.க செய்துக்கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சியல்ல. திராவக மாடல் ஆட்சி. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தான் திராவிட மாடல் ஆட்சி.

அது அ.தி.மு.க ஆட்சியில் தான் இருந்தது. உதாரணமாக, தொழிற்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும், இன்னும் வேங்கைவயல் விவகார குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திராவிட மாடல் எனச் சொல்வதற்கே அவர்களுக்கு தகுதி கிடையாது. தமிழ்நாட்டுக்கு இந்த திராவக மாடல் அரசு கெடுதி. ஆளுநர் நீட் போன்ற நல்ல விஷயங்களுக்கான மசோதாவை உடனே ஒப்புதல் அளித்தும், உள்நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பகுத்துப்பார்த்து நிறுத்திவைக்கவும் வேண்டும்.

சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக இந்த தி.மு.க மீது குற்றச்சாட்டி இருப்பது சாதாரண நபர் கிடையாது. ஆளும் அரசின் மீது பொறுப்பில் இருக்கும் ஆளுநர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களும், போதைப்பொருள்களும் இலகுவாக தமிழ்நாட்டில் நுழைவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். இதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே ஆளுநர் இதுபோல தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்காமல், 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே ஆளுநர் தன்னுடைய கடமையை செய்வதாக ஏற்றுக்கொள்வோம், தமிழ்நாட்டின் கல்வித் தரம் எங்கள் ஆட்சியில் சிறப்பாக இருந்தது. மத்தியில் கூட்டணியில் இருந்த தி.மு.க, இந்திரா காந்தி பொதுப்பட்டியலுக்கு மாற்றிய கல்வியை ஏன் பொதுப்பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரவில்லை?” எனக் கேள்வியும் அவர் எழுப்பினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Law and order issues tn governor to recommend use of article 356 admk jayakumar tamil news

Best of Express