பெரியார் சிலை அவமதிப்பு : செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அவரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை செய்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மற்றும் தாராபுரம் பகுதிகளில் இருக்கும் பெரியார் சிலைகள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் செருப்புகள் வீசப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பையும் சேர்ந்த தலைவர்கள் இந்நிகழ்விற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
பெரியார் சிலை அவமதிப்பு
சென்னை அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு அன்று விடுதலை சிறுத்தைக் கட்சியினர் மரியாதை செலுத்திய போது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருத்தர் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி பெரியாரின் சிலை மீது வீசினார். இதனை பார்த்த விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட நபரின் பெயர் ஜெகதீசன் என்றும் அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் அதன் பின்னர் தெரிய வந்தது. அவர் மீத் நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தையினர் ஆர்பாட்டம் நடத்தப்பட்ட பின்பு ஜெகதீசன் கைது செய்யப்பட்டார்.
செருப்பு வீசியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
சேலம் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ஜெகதீசன். சேலம் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த அவர் 2010-ம் ஆண்டு சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த அவர் 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஜெகதீசனின் மனைவி ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
கைதான வழக்கறிஞர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியிருக்கிறார். குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகும் ஜெகதீசனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.