கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்பு மன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. மாநகர சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்த இருந்த நிலையில் அதை பின் வாங்கியுள்ளனர். திங்கட்கிழமை கட்டு மாற்ற மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை அழைத்து வர வேண்டும்.
5 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு போராடி இந்த சிகிச்சை பெறப்பட்டுள்ளது.
தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்த பிறகு தான், கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் வேண்டுமென்றே கஞ்சா வழக்கை போலீசார் போட்டுள்ளனர். ஆனால் கஞ்சா வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்க முடியும் என சவுக்கு சங்கர் கூறியதாகவும் அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.” இவ்வாறு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பி. ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“