சைவத்துக்கும் வைணவத்துக்கும் திரும்புங்கள் சீமான் பேச்சு; பதிலடி கொடுத்த தலைவர்கள்!

திராவிடம், கம்யூனிசம், தலித்தியம் ஆகியவற்றை வீழ்த்துவதே குறிக்கோள் எனக் கிளம்பிய சில சாதிவெறியர்களின் வெற்றிதான் இன்றைய ‘தமிழ் இந்து தமிழ்த்தேசியம்’ என்று ஆழி செந்தில்நாதன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தமிழர் சமயமான சைவத்துக்கும் மாலியத்துக்கும் திரும்புங்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்த கருத்து குறித்து திருமாவளவன், சுப உதயகுமாரன், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக `பனை திருவிழா’ நிகழ்ச்சியை அக்டோபர் 16ம் தேதி சென்னையில் சீமான் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது: “நாங்கள் தமிழர்களின் சமயம் வேறு, எங்கள் வழிபாட்டு முறை வேறு; எங்கள் தெய்வங்கள் வேறு; எங்கள் சமயமே வேறு; அதனால் நான் உறுதியாக இருக்கிறேன். மீட்டெடுப்பதில் நான் தோற்கிறேன், வெல்கிறேன் அது பிரச்னை இல்லை. மீட்டெடுப்பது என்று வந்தால் என்னுடைய சமயம், என்னுடைய மெய்யியல் கோட்பாடு, எல்லாத்தையும் சேர்த்துதான் நான் மீட்டெடுக்கனும். நாங்கள் சைவர்கள்; என் மகனை வடபழனி முருகன் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போகும்போது என்ன கோத்திரம் என்று குருமார்கள் கேட்டார்கள். சிவகோத்திரம் என்று சொன்னோம். ஏனென்றால் நாங்கள் சிவ சமயம். எங்க அப்பாவுடைய சொத்து பத்திரம் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் வீட்டுக்கு வாங்க காட்டுகிறேன். அதில் சிவகோத்திரம்ணு எழுதியிருக்கிறது. நீங்கள் இன்றைக்கு இந்து சட்டப்படி என்று எழுதுகிறீர்கள். அன்றைக்கு எங்களுக்கு சிவ சமயம்ணுதான் எழுதியிருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுகிற சிவ சைவம். முருகனை வழிபடுகிற சைவம், மாயோனை வழிபடுகிற கண்ணனை வழிபடுகிற வைணவம். வைணவம் என்பதை நாங்கள் தூய தமிழில் மாலியம் என்கிறோம். இப்படித்தான் சமயங்கள் இருந்திருக்கிறது.

வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பவுத்தன், சீக்கியன், சைவன், பார்சீ நாங்கள் எல்லாம் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து அல்ல. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி நாங்கள் இந்து. அதை நான் ஏற்கவில்லை எதிர்க்கிறேன் என்கிறேன் அவ்வளவுதான்.

தமிழன் இந்துவே இல்லை. கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழன் சமயமே இல்லை. ஒன்று ஐரோப்பிய மதம் இன்னொன்னு அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம், என்னுடைய சமயம் சிவ சமயம். அதைத் தெரியாமல் நீங்கள் மீள வேண்டும் என்றால், மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்புகிறீர்கள் இல்லையா, அது போல மீண்டும் இதற்கு வாருங்கள். திரும்பி வா, சர்க்கரையை விட்டுவிட்டு கருப்பட்டிக்கு வருகிறீர்கள் இல்லையா. அது போல, திரும்பி வாங்க, அதனால்தான் நான் கூப்பிடுகிறேன்.” என்று கூறினார்.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் வெளியே இருந்து வந்த மதம் என்றும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தமிழர்களின் சமயமான சைவத்துக்கு வைணவத்துக்கும் திரும்புங்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன், சுப வீரபாண்டியன், அணு உலை எதிர்ப்பு போராளி, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப உதயகுமார் ஆகியோர் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

மதுரையில் இயற்கை யோகா மருத்துவ ஆரோக்கிய சிகிச்சை மையம் திறப்பு விழாவில் பங்கேற்ரு தலைமை வகித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசு இயற்கை மருத்துவத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை மருத்துவர்களுக்கான வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். மருத்துவமனையில் திரண்டு வந்த காவலர்கள்..

ஆங்கில, இந்திய மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில், இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவுகளை அரசு அனுமதிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவைச் சேர்க்க வேண்டும் இயற்கை மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு அளித்தால் அறுவை சிகிச்சைகள் குறையும்.

சமூக நீதி அரசியலை பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்கு துணைபோகும் வகையில் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என நான் ஏற்கனவே சீமானுக்கு சுட்டிகாட்டியுள்ளேன்.

மதம் என்பது வேறு ஆன்மீகம் என்பது. மதம் நிறுவனம். ஆன்மீகம் என்பது உணர்வு. எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி அரசியல் சனாதானவாதிகளுக்கு துணை போகிறது.

உலகளாவிய மதமாக கிறிஸ்துவம், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது. இந்து மதம் உலக மதமாக மாறவில்லை. ஏன் என இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்க வேண்டும். ஆசியா கண்டத்தில் கூட இந்து மதத்தை பின்பற்றும் நாடு இல்லை.

அரசியல் மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ் கார்ரர்கள் சீமான் எங்களுக்கானவர் என்று கூறுவது போல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகம் மற்றும் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை. இந்திய விமானம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆகியவை தனியார் மயமாகி வருகிறது.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க அனைவரும் ஒண்றினைய வேண்டும்.” என்று கூறினார்.

அணு உலை எதிர்ப்பு போராளியும் பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான சுப உதயகுமாரன் தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான் கருத்து குறித்து கூறியிருப்பதாவது: “இன்று சைவம், மாலியம், சிவனியம் என்று உருட்டுகிறவர் பிறப்பால் கத்தோலிக்கர். அவர் பூர்வீக வீட்டு முற்றத்தில் புனித லூர்து மாதா ஆலயம் ஒன்று அமைந்திருக்கிறது. மன்னார்குடி மரு. பாரதிசெல்வனும், நானும் பார்த்திருக்கிறோம். “தாய் மதம்” திரும்பியிருந்தால் ஆதாரங்களைக் காட்டுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சுப உதயகுமாரன், “நான் இந்துவுமல்ல, இசுலாமியரும் அல்ல, கிறித்தவரும் அல்ல. எந்த குறிப்பிட்ட மதத்துக்கும் நானோ, என் குடும்பத்தவரோ மாறியதும் கிடையாது. கட்டமைக்கப்பட்ட மதங்களின் எந்த அமைப்பிலும், ஆலயத்திலும் நான் உறுப்பினர் அல்ல. நான் இயற்கையை, முன்னோர்களை,காவல் தெய்வங்களை வணங்கும் பச்சைத் தமிழன்.” என்று தெரிவித்துள்ளார்.

தன்னாட்சி தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், தனது முகநூல் பக்கத்தில், சீமான் கருத்து குறித்து கூறியிருப்பதாவது: “எல்லா சொற்களுக்கும் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்வது முக்கியமானது. ஒரே சொல் கூட, ஒரே வாக்கியம் கூட பல்வேறு பொருள்களையும் நோக்கங்களையும் கொண்டிருக்கும்.

வைதீக இந்துப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக மாற்று சமய, தனிச்சமய நெறிகளைப் பேசுவது ஒரு முக்கியமான உத்திதான். அத்தகைய நெறிகளை பலரும் இங்கே முயற்சி செய்திருக்கிறார்கள். அதை வரவேற்கவே செய்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக வள்ளலார் வழி. வைகுந்தர் வழி, முருக வழிபாடு, ஆசிவகம் உள்ளி்ட்ட பல்வேறு போக்குகளினூடாக இது பலரால் வெளிப்பட்டிருக்கிறது. ஆரிய மறுப்பு சைவக் கோட்பாடு போன்றவற்றையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற வழிமுறைகளை முன்வைத்த பலர் மிக எளிதில் பிறகு “இந்து மகாசமுத்திரத்தில்” கலந்துவிடுவதையும் நாம் காணமுடிகிறது, கர்நாடக லிங்காயத்துகளுக்கும்கூட இன்று அதுதான் நடந்திருக்கிறது. மதம் என்கிற யானையின் மீது ஏறிவிட்டால் அப்புறம் இறங்குவது கடினம்.

இப்போது பேசப்படும் புதுரக தமிழ் இந்துத்துவம், இன்றைய வைதீக இந்து ராஷ்ட்டிரக் கனவுக்குள் தமிழ்நாட்டை அடகு வைப்பதற்கே உதவும்.

திராவிடம், கம்யூனிசம், தலித்தியம் ஆகியவற்றை வீழ்த்துவதே குறிக்கோள் எனக் கிளம்பிய சில சாதிவெறியர்களின் வெற்றிதான் இன்றைய ‘தமிழ் இந்து தமிழ்த்தேசியம்’.

சைவ சமயமே தமிழர் சமயம் என்று கூறத்தொடங்கிவிட்டால், கிறிஸ்தவர்களாகவும் முஸ்லீம்களாகவும் உள்ளவர்களை மதம் மாறச்சொல்லுவதில்தான் அது முடியும்.

மதத்தில் எப்படி தாயகத்தைப் பேசமுடியும்?

கிறிஸ்தவமும் இஸ்லாமும் எந்த நாட்டில் பிறந்திருந்தால் என்ன? தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆகமுடியும் என்றால், அல்லாவும் பரமபிதாவும் தமிழ்நாட்டில் ஏன் கடவுளாக ஆகமுடியாது? – முதலில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா இப்போது?
தமிழர்கள் பல்வேறு மதங்களில் இருக்கலாம் என்கிற அடிப்படை உண்மையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?

தமிழர்கள் எந்தச் சமயத்தவராக இருந்தாலும், அவர்கள் இந்துவோ கிறிஸ்தவரோ முஸ்லீமோ பெளத்தரோ சமணரோ, அவர்களை தேசிய இன அடிப்படையில் தமிழர்களாக ஒன்றிணைக்கவேண்டும் என்பதுதான் ஓர் தமிழ்த்தேசியக் கோட்பாடாக இருக்கமுடியும்.

சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு எதிராக தலைவர் பிரபாகரன் தமிழ்ச் சைவ இனவாதத்தை முன்வைக்கவில்லை. சொல்லப்போனால் தமிழீழப் பகுதிக்குள் வசிக்கும் சிங்களர்களையும் உள்ளடக்கிய தேசிய அரசியலையே அவர் முன்மொழிந்திருந்தார்.

உண்மையில், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிற வாக்கியம் ஒரு கள யதார்த்தம் தொடர்பான வாதமல்ல. நிஜத்தில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் அந்த அடையாளத்தையே தங்கள் மத அடையாளமாக தமிழ்பேசும் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அது நிதர்சனம்தான்.

எனவே அது வரலாறு தொடர்பான வாக்கியம். இந்து அடையாளம் நமக்கு இழிவை உருவாக்குகிறது என்பதால், அந்த அடையாளத்தை ஏற்றுக்கொண்டதால் வரலாற்று ரீதியில் நமது இனம் சரிவைக் கண்டிருக்கிறது என்பதால், அதை நமது முன்னோடிகள் எதிர்த்தார்கள்.

இன்று காலம் மாறியிருக்கிறது, அந்த உத்தி பலன் தரவில்லை. எனவே மாற்று மத அடையாளங்களை முன்வைப்பதில் தவறில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்காக, எந்த சைவமும் வைணவமும் இன்றைய இந்து அடையாளத்தை சேர்ந்து உருவாக்கினவோ அந்த சைவத்துக்கும் வைணவத்துக்கும் அப்படியே திரும்பிப் போய்விடமுடியுமா?

அப்படி போகவேண்டும் என்று முடிவுசெய்பவர்களின் உரிமையை நாம் மறுக்கமுடியாது என்றாலும், ஏற்கனவே இந்த வைதீகச் சாக்கடையிலிருந்து வெளியேறிவிட்டவர்களை மீண்டும் தாய்மதத்துக்குத் திரும்பு என்று கூறமுடியுமா? அப்படிக் கூறினால் அது என்ன அரசியல்?

இந்துவத்துவ சக்திகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கிறிஸ்தவ பழமைவாதிகளும் பெளத்த அடிப்படைவாதிகளும் உலகில் மதங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும்போது, நாம் மதத்தைத் தாண்டிய மனிதத்தை முன்னிறுத்தியே அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்கமுடியும்.
ஒருவேளை தந்திரோபாயமாக மத அடையாளத்தை கையிலெடுக்க விரும்பினால், அதுவும் மதவெறுப்புக்கும் பிளவுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும். அதைவிட அது பொது எதிரியை கதிகலங்க வைக்கவேண்டும்.

ஆனால், இன்று நடப்பது என்ன?

நாம் தமிழர் கட்சியும் தெய்வத் தமிழ்ப் பேரவையும் முன்னெடுக்கும் அரசியல் யாருக்குச் சேவை செய்யப்போகிறது என்பதை காலம் சீக்கிரமாக உணர்த்திக்காட்டும்.

தமிழின் தனித்தன்மையை முன்னிறுத்தி அதையே அரசியலாக ஆக்கிய திராவிட இயக்கம்தான் முதல் எதிரி என்றும், அதை வீழ்த்த தமிழின் தனித்தன்மையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஆரியத்துடனும் கைகோர்க்கலாம் என்கிற முடிவுக்கு இவர்கள் வந்துசேர்ந்து நீண்ட நாட்களாகிவி்ட்டது.
அதையும் விரைவில் அறிவிப்பார்கள். அல்லது அறிவிக்கவைக்கப்படுவார்கள்.
ஏமாளிகள் அதுவரை ஏமாந்து நிற்கட்டும். சுட்டிக்காட்டும் எங்களைப் போன்றவர் மீது வழக்கம் போல வசைபாடுபவர்கள் பாடட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Leaders condemns to seeman for calls to muslims and christians to return to tamilian religious saivism and vaishnava

Next Story
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர்; எதிர்ப்பு தெரிவித்தாரா முன்னாள் அமைச்சர் வளர்மதி?AIADMK Golden Jubilee celebration, MGR name to aiadmk party office, Former minister Valarmathi, ops eps, அதிமுக, தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர், முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்பு, ஓபிஎஸ் ஈபிஎஸ், tamil nadu politics, mgr, aiadmk goldern jubilee
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com