Advertisment

விஜய்யின் கன்னிப் பேச்சு: வரவேற்பும் எதிர்ப்பும் - தலைவர்கள் ரியாக்ஷன்ஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அரசியல் கன்னிப் பேச்சு குறித்து, வரவேற்பும் எதிப்பும் கலந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leaders reactions to vijay

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அரசியல் கன்னிப் பேச்சு குறித்து, வரவேற்பும் எதிப்பும் கலந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அரசியல் கன்னிப் பேச்சு குறித்து, வரவேற்பும் எதிப்பும் கலந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். த.வெ.க மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கிப் பேசியது குறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க அமைப்புச் செயலாள ஆர்.எஸ். பாரதி, தி.மு.க-வின் ராஜிவ் காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்றது. மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான த.வெ.க தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

த.வெ.க மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “பெரியார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை, அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை என்று கூறினார். மேலும், யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை” என்று கூறினார். 

மேலும், “அரசியல் அடிச்சுவடியை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடு” என்று கூறினார்.

தனது அரசியல் எதிரிகள் குறித்து த.வெ.க விஜய் பேசுகையில்,  “நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், நம்முடைய இன்னொரு எதிரி  ‘கரப்ஷன்’ (corruption) கடபடதாரிகள்” என்று பேசினார். 

மேலும், “எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள த.வெ.க-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?” என்று தி.மு.க-வை நேரடியாகத் தாக்கிப் பேசினார். 

மேலும், “திராவிடமும் தமிழ்த் தெசியமும் நம்முடைய இரு கண்கள்” என்று த.வெ.க தலைவர் விஜய் பேசினார். 

த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் கன்னிப் பேச்சு குறித்து, அரசியல் கட்சித் தலைவர் வரவேற்பும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியது குறித்து, புதிய தலைமுறை டிவியில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, கூட்டணிக்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி என்பது எப்போதும் வலுவாக இருந்துவருகிறது. அதில் எந்தவித இடப்பெயர்ச்சியும் ஏற்பட வாய்ப்பில்லை, இந்த கேள்வி வருவதற்கான எந்த சூழலும் எங்களுக்கு ஏற்படாது” என்று பேசியுள்ளார்.

த.வெ.க மாநாட்டில் பேசிய விஜய்யின் கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா, “தமிழகத்தில் தேசத்திற்காக ஆக்கமும் ஊக்கமும் தந்த வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பலபேர் இருக்கின்றனர். அவர்களை பற்றியெல்லாம் பேசவில்லை, ஆனால், பெரியாரை பேசுகிறார். அவருடைய ஐடியாலஜியில் அவருக்கே தெளிவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. மதசார்பற்ற ஒரே கட்சியாக இருக்கும் பா.ஜ.க-விற்கு விஜய்யின் பேச்சால் எந்த பாதிப்பும் இல்லை, எங்களுக்கு அவர் போட்டியாக இருக்கவும் முடியாது” என்று பேசினார்.

விஜய்யால் பா.ஜ.க-வின் வாக்கு வங்கியை உடைக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹெச். ராஜா, “திராவிட கட்சிகளின் வாக்குகளை வேண்டுமானால் அவரால் உடைக்க முடியுமே தவிர, தெளிவில்லாத ஐடியாலஜியை வைத்துக்கொண்டு பாஜக போன்ற தேசிய கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது” என்று பேசினார்.

த.வெ.க மாநாட்டில் விஜய் தி.மு.க-வை தாக்கிப் பேசியது குறித்து தி.மு.க-வின் மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “விஜய் நடித்த வி. சாலை படம் கொஞ்ச நாள் ஓடும்” என்று விஜய்க்கு தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன். ‘குட் ஃபிலிம்’; 100 நாள் திரையரங்கிலும், ஓ.டி.டி-யில் கொஞ்சநாளும் ஓடும். வாழ்த்துகள் விஜய்” என்று பதிவிட்டுள்ளார்.

ஊடகங்களில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,  “காய்த்த மரம் கல்லடி பட வேண்டும், தி.மு.க ஒரு ஆலமரம்.  யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி தி.மு.க-வுக்கு உள்ளது” என்று கூறினார்.

‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்று விஜய் பேச்சுக்கு வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,  “‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். 

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்.”  என்று பதிவிட்டுள்ளார்.

“திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்” என விஜய் பேசியது, “எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  “திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொல்கிறார். அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது; அவருடைய கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்துப்போகவில்லை” என்று கூறியுள்ளார். 

“எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று  விஜய் பேச்சுக்கு ஐ.ஜே.கே தலைவர் பாரி வேந்தர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில்  தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும்,  அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது.  மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது,  இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ?  அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.  தமிழ்நாட்டில் உங்கள் முயற்சி வெற்றி பெற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  எல்லாவற்றிலும் உச்சமாக  சமத்துவம்,  சகோதரத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின்  முக்கியத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறீர்கள்.  வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

H Raja Vijay Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment