கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சிறுத்தை நடமாடியதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாட்டம் இருக்கும்பட்சத்தில் அதனை விரைவாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறுத்தை நடமாட்டம் என்று பரவிய தகவலின் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. நாளை பல்கலைக்கழக மைதானத்தில் விளையாட்டுப் போட்டி நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக வருகை தந்த மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்