அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.பாலகுருசாமியின், இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024 - கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் இன்று (அக்.26) நடைபெற்றது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவிற்கு முனைவர் இ.பாலகுருசாமி தலைமை வகித்தார். இம்மாநாட்டில், கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம்., இயக்குநர் முனைவர்.அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் முனைவர்.தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பங்கேற்ற, கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.ராமசாமி விருந்தினர்களை வரவேற்றார். முனைவர் இ.பாலகுருசாமி தனது சிறப்புரையில், சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளாகியும் இன்னும் நம்நாடு வளர்ந்து வரும் நாடாகவே இருக்கிறது என்றும் இந்தியா வளர்ந்த நாடக மாற பொருளாதர முன்னேற்றம் மட்டுமின்றி சமூக முன்னேற்றமும் வேண்டும் என்றும் கூறினார்.
சமூக பொருளாதாரத்தில், பெண்கள் முன்னேற்றம் அடைவது மிகவும் அவசியம் என்றும் அதனை கருத்தில் கொண்டே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற மாநாட்டின் கருத்தை பங்கேற்பாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர். இதில், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும், மாநாட்டின் சிறப்பம்சமாக, "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற தலைப்பில் புதிய தீர்வுகளை முன்மொழிய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில், முதல் பரிசாக ₹25,000, இரண்டாம் பரிசாக ₹15,000, மூன்றாம் பரிசாக ₹10,000 ரூபாயும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முனைவர் இ.பாலகுருசாமி கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல்வேறு படைப்புகளை படைப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும் எனவும் அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து வரும் பொழுது பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பார்கள் எனவும் நாட்டிற்கான சேவைகளை அவர்களால் செய்ய முடியும் எனவும் கூறினார்.
இது போன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியமல்ல இதில் பங்கேற்க வேண்டும் என்பதே முக்கியம். அதுவே மாணவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான முதல் படியாக இருக்கும் என்றும் கூறினார்.
சமீப காலமாக ஆளுநர் பங்கேற்கும் கல்வி நிகழ்ச்சிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பது குறித்து, இதுபோன்ற நிகழ்வுகள் துரதிஷ்டவசமானது என்றார். மேலும், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான ஈகோ பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று கூறிய அவர், ஈகோவை தவிர்த்துவிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என கூறிய அவர், இது குறித்து தற்போதைய முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்டார். நுழைவுத் தேர்வு என்பது மிகவும் முக்கியம் என கூறிய அவர், மருத்துவ படிப்பிற்கான திறன் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றும் அதற்கான தேர்வு தான் நீட் என்றும் கூறினார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து, 21-ம் நூற்றாண்டுக்கான தகுதியுள்ள பண்புள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று கூறிய அவர், அதற்கான சாராம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் நிறைய இருக்கிறது என்றார். தேசிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநிலங்கள், தங்களுக்கு தேவையானதை ஏற்றுக்கொள்ளலாம் தேவையில்லாததை விட்டு விடலாம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறிய அவர், இதை எதிர்ப்பது என்பது அரசியல் என விமர்சித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.