சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி என்றழைக்கப்படுபவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. அந்தளவுக்கு அவர் தனது நாட்டின் வளர்ச்சியிலும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
இவர் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சிங்கப்பூரில் தொழில்முனைவோர்களாகவும், வேலைவாய்ப்பு பெற்றும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளனர். தமிழர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த லீ குவான் யூ-வுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு 6 அடி உயர வெண்கலச் சிலையை அமைக்க தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் ஆர்.கருணாநிதி முடிவெடுத்தார். இதற்கான பணியை திருவலஞ்சுழியில் உள்ள வேதா டெம்பிள் ஒர்க்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.
அதன்படி, லீ குவான் யூ-வின் வெண்கலச் சிலை செய்து முடிக்கப்பட்டு அது அங்கிருந்து நாளை சென்னைக்கு அனுப்பப்படுகிறது. சென்னையிலிருந்து விரைவில் இந்தச் சிலை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சிலை வடிவமைப்பாளர் வேதா. ராமலிங்கம், “சிங்கப்பூரில் தமிழர்கள் தொழில் தொடங்கவும், அவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ.
அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆர்.கருணாநிதி, அவரது உருவச்சிலையை தன்னுடைய நிறுவனத்தில் நிறுவ முடிவு செய்தார். அதற்காக சிலைவடிக்கும் பணியை எங்களிடம் வழங்கினார்.
இதையடுத்து, அந்தச் சிலை வடிவமைக்கும் பணி கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கியது. தற்போது அந்தச் சிலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு (ஜூன் 12) இன்று மாலை சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளது. வெண்கலத்தாலான இந்த சிலை 6 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில் 150 கிலோ எடையில் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னையில் உள்ள அவரது நிறுவனத்தில் நிறுவுவதற்காக சோழ மன்னன் ராஜராஜசோழனின் வெண்கலச் சிலையையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளோம். இந்தச் சிலை ஏழரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் சுமார் 350 கிலோ எடையும் கொண்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.4.50 லட்சம் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“