கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கில், நடைபெற்ற தமிழக சட்டபேரவைக் கூட்டத்தில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சமூக இடைவெளி, தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின்3 நாள் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கலைவாணர் அரங்கில் முதல் நாள் கூட்டத்திற்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முகக் கவசம் அணிந்து வந்து கலந்துகொண்டனர்.
சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியதும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, வசந்தகுமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல, கொரோனா வைரஸ் பாதிப்பால், இறந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, சபாநாயகர் தனபால் சட்டப் பேரவைக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்காகவும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். ஆனால், எனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது. இந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், புதிய கல்விக் கொள்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்தும் பேச அனுமதி கோரியுள்ளோம். மாணவர்கள் உயிரிழப்பு குறித்தும் விவாதிக்க வேண்டும். அதனால், சட்டப் பேரவைக் கூட்டம் 2 நாள் போதாது என்று திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, முதல்வரோ, அமைச்சரோ இதுவரை ஒருமுறை கூட பிரதமரை சந்தித்து வலியுறுத்தவில்லை” என்று கூறினார்.
கலைவாணர் அரங்கில் நாளை தமிழக சட்டப் பேரவையின் 2வது நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி திமுக புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்த விவாதங்களை எழுப்பும் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"