Advertisment

பள்ளி புத்தகங்களில் தமிழக விடுதலை வீரர்கள் இருட்டடிப்பா? ஆளுநர் குற்றச்சாட்டுக்கு லியோனி விளக்கம்

திராவிடம் என்ற பழுத்த மரத்தின் மீது பொய் கற்களை வீசி சாய்த்து விடலாம் என்ற ஆளுநர் கனவு காண்கிறார்; பள்ளி பாடப்புத்தகங்களில் தமிழக விடுதலை வீரர்கள் புறக்கணிப்பு என்ற ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு லியோனி பதில்

author-image
WebDesk
New Update
dindigul i leoni

திராவிடம் என்ற பழுத்த மரத்தின் மீது பொய் கற்களை வீசி சாய்த்து விடலாம் என்ற ஆளுநர் கனவு காண்கிறார்; பள்ளி பாடப்புத்தகங்களில் தமிழக விடுதலை வீரர்கள் புறக்கணிப்பு என்ற ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு லியோனி பதில்

தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் சாதித் தலைவர்களாக சிறுமைப் படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இதற்கு தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு காட்டமாக ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள். பல காலமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் எழுப்பி வரும் கேள்விகள். தான் தமிழகத்தின் ஆளுநராக வந்தபிறகு, தமிழகத்தில் இருந்து சுதந்திரத்துக்குப் போராடிய வீரர்களின் பட்டியலைக் கேட்டதாகவும், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் வெறும் 40 பேர்தான் இருந்ததாகவும் ஆளுநர் கூறியிருந்தார். ஆளுநர் தான் தேடிக் கண்டுபிடித்த பட்டியலில் 6 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருவதாகவும், பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசி வருவதாகவும் கூறியிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை பள்ளி பாடப்புத்தகத்திலும், ஆட்சியிலும் இருட்டடிப்பு செய்யப்ப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழ்நாட்டுப் பள்ளிகளின் பாடப் புத்தகங்களை எடுத்துப் படித்தால் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அல்லது ஆசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால், இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், விடுதலை போராட்ட வரலாறு தெற்கிலிருந்து தான் தொடங்க வேண்டும், என புதுசா ஒரு அரிய கண்டுபிடிப்பை சொல்லியிருக்கார்.

ஆனால், பள்ளி பாடப்புத்தகங்களில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் அடங்கிய சுதந்திர தின அணிவகுப்பு வாகனத்தை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தி.மு.க அரசு அந்த வாகனத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று காட்சிப்படுத்தியது.

ஆனால் ஆளுநர் உண்மைக்கு புறம்பான தகவலை தந்துக் கொண்டிருக்கிறார். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் 2024 தேர்தல் இந்த ஆளுநரே தொடர்ந்து இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் ஆளுநர் இப்படி உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதால், உண்மையை எடுத்துரைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்து வருகிறது. தமிழகம் – தமிழ்நாடு சர்ச்சை, வள்ளலார் சனாதனத்தின் உச்சம், ஆரியம் – திராவிடம் என்று எதுவுமில்லை போன்றவற்றை கூறியதால், நாங்கள் மக்களிடம் விளக்கி சொல்ல ஆளுநர் வாய்ப்பு வழங்கி வருகிறார். அதனால் இந்த ஆளுநரே நீடிக்க வேண்டும்.

திராவிடம் என்ற பழுத்த மரத்தின் மீது பொய் கற்களை வீசி சாய்த்து விடலாம் என்ற ஆளுநர் கனவு காண்கிறார். ஆனால், சமூக நீதி, சமத்துவம், மகளிர் உரிமை போன்ற கனிகள் மக்களிடம் சென்று சேர்கிறது. எனவே திராவிடத்தையோ, திராவிட சித்தாந்தத்தையோ எந்த சக்தியாலும் வீழ்த்தி விட முடியாது, அது என்றும் நிலைத்து நிற்கும்.

பா.ஜ.க மாநில தலைவர் தம்பி அண்ணாமலை, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களை வாங்கி உட்கார்ந்து பொறுமையாகப் படித்தால், அதுவே அவர் கேட்கும் வெள்ளை அறிக்கையாக இருக்கும். தலைவர்கள், சாதி மத பேதமின்றித்தான் செயல்பட்டுள்ளனர். ஆனால், மக்கள் அவர் தங்கள் சாதியை சேர்ந்த தலைவர் என சொந்தம் கொண்டாடி, தங்கள் சாதிக்குள் அடக்கி வைக்கின்றனர். இதில் அந்த தலைவர்களின் மீது தவறு கிடையாது.

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா இன்று 101 வயதில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு 'தகைசால் தமிழர்' விருதை தமிழக அரசு வழங்கியது. அவருக்கு கொடுத்த ரூபாய் 10 லட்சத்தையும் அவர் திரும்ப பொதுப் பணிக்கே அளித்தார். அத்தகைய தன்னலமற்ற தலைவர் சங்கரய்யாவை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருப்பது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை அவர் புறக்கணிப்பதற்கு நேரடியான எடுத்துக்காட்டு." இவ்வாறு லியோனி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment