நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பூரூக்லேண்ட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நாயை விரட்டி வந்த சிறுத்தை புலி அப்பகுதியில் வசிக்கும் விமலா என்பவரின் வீட்டின் ஒருபகுதிக்குள் நுழைந்து பதுங்கியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணம் இல்லாமலும் வனத்துறைக்கு தகவல் கொடுக்காமல் சிறுத்தை புலியை வீட்டிலிருந்து வெளியே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறுத்தை புலி ஆக்கோரஷமாக 3 அதிகாரிகளை தாக்கியது, படுகாயமடைந்த மூவர் குன்னூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் மூன்று பேரை சிறுத்தை தாக்கியதை தொடர்ந்து அவர்களும் உதகை குன்னூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 6 நபர்களும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிறுத்தை புலி பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வனத்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர். அத்துடன் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டது. சிசிடிவி கேமரா மூலம் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போது நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சிறுத்தை புலி குடியிருப்பை விட்டு வெளியேறியது கண்டறியப்பட்டது.
சிறுத்தை புலி வீட்டிலிருந்து வெளியேறும் காட்சியை வனத்துறையினர் தற்போது வெளியிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தை புலியால் அப்பகுதியில் 26 மணி நேரம் நடைபெற்ற பிரச்சனை முடிவுக்கு வந்தது.
தீயணைப்பு துறையினர் வனத்துறையினர் உபகரணம் கொண்டு வருவதற்குள் தாங்கள் ஆகவே முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்