தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுத்தைக் குட்டியை, விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மொய்தீன் என்பவர் கையில் மூங்கில் கூடை எடுத்து வந்தார்.
அதில் என்ன உள்ளது?, என்று சுங்க அதிகாரிகள் விசாரித்த போது 'வளர்ப்பு பிராணி' உயர் ரக நாய் குட்டியை கொண்டு வருகிறேன் என்றார். அதன் மீது கர்ச்சீப் போட்டு மூடி இருந்ததால் அதை அதிகாரிகள் அகற்றிப் பார்த்தனர். அப்போது கூடைக்குள் சிறுத்தைக் குட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை விமானத்தில் கொண்டு வருவதற்கு உரிய சான்றிதழ் ஏதும் இல்லாததால் அதை அங்கேயே பறிமுதல் செய்தனர்.
1.1 கிலோ எடையுடைய சிறுத்தைக் குட்டியை மீட்ட அதிகாரிகள், காஜா மொய்தீனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், நண்பர் கேட்டதால் சிறுத்தைக் குட்டியை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.
நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ள விமான நிலைய அதிகாரிகள் முதல்முறையாக சிறுத்தைக் குட்டி கடத்தி வரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, பசியில் இருந்த சிறுத்தைக் குட்டிக்கு விமான நிலைய அதிகாரிகள் பாலுட்டியுள்ளனர். அதிகாரி ஒருவர் சிறுத்தைக் குட்டியை தனது கையில் வைத்துக் கொள்ள, மற்றொரு அதிகாரி பாட்டிலில் அடைத்த பாலை அதற்கு ஊட்டினார்.
வன உயிரின காப்பக அனுமதியோ, சுகாதார துறை அனுமதி சான்றிதழ் எதுவும் இல்லாததால் சிறுத்தைக் குட்டியை தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.