திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அவ்வபோது வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது,
குறிப்பாக மலையோர கிராமங்களில் விவசாய நிலங்களில் கரடி, யானை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் அடிக்கடி வந்து செல்கிறது.
இந்நிலையில் பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு சொந்தமான ஆடுகளை மர்ம விலங்கு ஒன்று தூக்கிச் சென்றுள்ளது,
ஆட்டுக்குட்டி மாயமானதை கண்ட விவசாயிகள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், மலை அடிவாரப் பகுதியில் இறந்த நிலையில் ஆட்டுக்குட்டி கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஆட்டுக்குட்டியை எடுத்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது ஆட்டுக்குட்டியை சிறுத்தை தாக்கியதற்கான அடையாளங்கள், எச்சங்கள் இருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து உடனடியாக அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலயத்தின் துணை இயக்குனர் இளையராஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உடனடியாக அந்த பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்க ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும், வனத்துறையில் உள்ள பிரபல மோப்ப நாயை (நெக்ஸ்) அழைத்து வந்து சிறுத்தை நடமாட்டம் எந்தெந்த பகுதியில் உள்ளது என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் இரண்டு கூண்டுகள் தற்போது வைக்கப்பட்டுள்ளது,
இது மட்டுமல்லாமல் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் இரண்டு குழுக்களாக வனத்துறை அதிகாரிகள் இரண்டு கிராமத்தில் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஓன்று இன்று அதிகாலை சிக்கியது வனத்துறைக்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சிறுத்தையை பிடித்த வனத்துறை அதிகாரிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மணிமுத்தாறு பகுதியில் சிறுத்தையை கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இருப்பினும் அந்த இரண்டு கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“