தேசிய அளவிலான தடுப்பூசி முகாம் ஜனவரி 16ஆம் தேதி துவங்கப்பட்டதிலிருந்து மொத்தம் உள்ள 7.12 லட்சம் சுகாதார பணியாளர்களில் 43% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி ஏராளமான துணை மருத்துவ ஊழியர்கள், செவிலியர்களை பாதுகாத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிம்சி மருத்துவமனை 2600 படுக்கை வசதி கொண்டது. இந்த மருத்துவமனை ஜனவரி 21 முதல் ஏப்ரல் 30 வரை தங்களது 84.8% ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இவர்களில் 93.4% பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், நோய் தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் பாதுகாப்பு 65% என மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் இது மருத்துவமனையில் சேர்ப்பதில் 77% ஆகவும், ஐசியு சேர்க்கைக்கு வரும்போது 94% ஆகவும் அதிகரித்தது. மொத்தத்தில் மூன்றாவது அலைகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம்.
இதுகுறித்து ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஜே வி பீட்டா கூறுகையில், ஆரம்பத்தில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது எளிதானதாக அல்ல. ஆனால் ஒவ்வொரு துறையிலும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு இப்போது இவ்வளவு பேர் செலுத்தியுள்ளனர்.இதனால் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது என்றார்.
பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 1,350 சிஎம்சி ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 27சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. 10 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும், 9 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களில் 4 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மருத்துவமனை சேர்க்கை தேவைப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையின் மற்றொரு ஆய்வில், தடுப்பூசி 100% நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கவில்லை. முதல் டோஸ், அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை காட்டிலும் தடுப்பூசி போடாதவர்களுக்கே நோய் தொற்று காணப்பட்டது. முதல் தடுப்பூசி முகாம் திறக்கப்பட்ட 100 நாட்களில்(ஜனவரி 16 முதல் ஏப்ரல் 24) வரை 3,225 சுகாதார பணியாளர்களுக்கு SARSCOV-2 அறிகுறி இருந்ததாக ஆய்வு கூறுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வில், 3,235 பேரில் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. 20 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தவிர வேறு யாருக்கும் ஐசியூ சிகிச்சை தேவைப்படவில்லை. உயிரிழப்புகளும் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளளது.
இதேபோல் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்களிடையே நோய் பரவல் என்பது கொரோனா முதல் அலையில் சற்று குறைவாக இருந்தது. ஆனால் கடுமையான நோய் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நிலையும் இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பாதிக்கப்பட்ட 284 மருத்துவர்களில் 78 பேர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இரண்டாவது அலையில் நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தது. ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் லேசான அறிகுறிகளுடன் மீண்டு, பெரும்பாலும் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். யாருக்கும் கடுமையான நோய் அறிகுறிகள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என ஜிப்மர் பேராசிரியர் N.G. ராஜேஷ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”