Advertisment

ஊழல் தடுப்பு பிரிவில் அளிக்கப்பட்ட மனுக்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மனுக்களே விசாரணைக்கு ஏற்பு; அதிர்ச்சி தகவல்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெறப்பட்ட புகார் மனுக்களில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான மனுக்களே விசாரணைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DVAC

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி வரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநகரத்திற்கு 21 ஆயிரத்து 660 புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், 45 மனுக்கள் மட்டுமே முதற்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 9 மனுக்கள் விரிவான விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இரண்டு புகார்களே வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தரவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி கார்த்திகேயன் என்பவர் பெற்றுள்ளார்.

Advertisment

ஊழல் தடுப்பு பிரிவுச் சட்டம் 1988 மற்றும் அதன் 2018 திருத்தத்தின் கீழ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பங்காற்றுபவர்களுக்கு எதிராக அளிக்கப்படும் புகார்கள் இதில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

 
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், அரசு அலுவலகங்களில் திடீரென மேற்கொள்ளப்படும் சோதனைகள், ஊழல் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கைகளைக் கொண்டு அவற்றில் முதற்கட்ட விசாரணை, விரிவான விசாரணை மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 21 ஆயிரத்து 660 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 9 மனுக்கள் மட்டுமே விரிவான விசாரணைக்கும், இரண்டு மனுக்கள் மட்டுமே சாதாரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 145 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 56 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது. அவற்றில் 6 மனுக்கள் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெறப்பட்ட மனுக்களில் ஒரு சதவீதத்திற்கு குறைவான மனுக்களே முதற்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A-வின் கீழ்,, புகார் மனுவை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படுவதாக தெரிகிறது. இதனால், குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியர்கள் விசாரணையில் இருந்து பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு, உயரதிகாரிகளிடமிருந்து போலீசார் தரப்பில் அனுமதி பெற வேண்டுமென கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

எனினும், பெறப்பட்ட மனுக்கள் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவை வகைப்படுத்தப்படுவதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக வட்டாரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உண்மையாகவே குற்றம் செய்த நபர்கள் மீது அளிக்கப்படுவதில்லை எனவும் கூறுகின்றனர்.  மேலும், பலர் பொய்யான பெயர்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு புகாரளிப்பதால் அவற்றை அடையாளம் காண முடிவதில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேபோல், மற்ற துறைகளுக்கு அனுப்பப்பட்ட புகார்களின் நகல்களும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்படுவதாகவும், அந்த புகார்களுக்கும், ஊழல் தடுப்பு பிரிவுக்கும் தொடர்பு இல்லையெனவும் அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. மேலும், முன்பகை மற்றும் போட்டியின் காரணமாக போலியான புகார்கள் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வகைப்படுத்தப்பட்ட மனுக்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் போது, அவற்றில் உண்மைத் தன்மை இருக்கும்பட்சத்தில், அதன் மீது நடவடிக்கை எடுக்க துறையின் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

புகார் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக, அவை மீது முதற்கட்ட மற்றும் விரிவான விசாரணை நடத்தப்படுவதாக இயக்குநரகம் கூறுகிறது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதன் நிலை குறித்து மனுதாரருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

DVAC bribe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment