அன்புசெழியன் சொத்துக்களை மதிப்பிடலாம்; இறுதி முடிவெடுக்கக் கூடாது : சென்னை ஐகோர்ட் உத்தரவு

நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, அன்புச்செழியனின் வருமானம் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ள வருமான வரித் துறை உதவி ஆணையருக்கு அனுமதியளித்தது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வருமானத்தை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை தொடரலாம் என வருமான வரித் துறைக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதன் மீது எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறை உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

சினிமா பைனான்சியன் அன்புச் செழியன். இவர் மீது கந்துவட்டி வசூலிப்பதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இயக்குநர், நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார், தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடித்தத்தில், அன்புச் செழியன், வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு மோசமாக நடத்தியதாக புகார் சொல்லியிருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருப்பதாக போலீசார் சொன்னாலும், அவர் முதல்வருடன் மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்புச் செழியனுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 67 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களின் மூலம், 2010 – 11 முதல் 2015 – 16ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 375 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையை, 175 கோடி எனக் குறைத்து காட்டியுள்ளார்.

இந்த கூடுதல் வருமானத்திற்கான வரியை செலுத்தி விடுவதாகக் கூறி, அன்புச் செழியன் தரப்பில் வருமான வரித் துறை தீர்வு ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அவரது மேல் முறையீட்டு மனுவையும் நிராகரித்து கடந்த ஜனவரி 5ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, அன்புச்செழியனின் வருமானம் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ள வருமான வரித் துறை உதவி ஆணையருக்கு அனுமதியளித்தது. அதேசமயம், அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதி உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close