ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும்! பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு

மே 22ம் தேதி நடைபெற்ற பேரணியை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். 100வது நாளான மே 22ம் தேதி நடைபெற்ற பேரணியை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியானார்கள்.

துப்பாக்கிசூடு தொடர்பாக தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில், பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. இது குறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close