தமிழ்நாட்டில் ஏற்கனவே க்ளப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கும் உரிமம் இருந்த நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகள், விளையாட்டு அரங்குகளில் மதுபானம் வழங்குவதற்கு சிறப்பு உரிமம் வழங்க தமிழ்நாடு மதுபானம் விதிகளில் திருத்தும் செய்து தமிழ் நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதைப்பற்றி எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு,
பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி", என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.
மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்", என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், "திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!", என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.