பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
கண்ணாடி பாலம் திறப்பு: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி இந்தியாவிலேயே முதல் முறையாக கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம் இன்று திறந்து வைப்பதாக முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் பெருமிதம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 30, 2024 22:23 IST
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்; திட்டமிட்டபடி செயல்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது; ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன. ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் பணிக்காக சி-6- ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.
-
Dec 30, 2024 21:51 IST
வயநாடு நிலச்சரிவு: அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்தது மத்திய அரசு
கேரளாவின் வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக மத்திய அரசு அங்கீகரித்தது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்த நிலையில், அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
-
Dec 30, 2024 21:24 IST
விஜய்யைத் தொடர்ந்து ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கைக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்தார். த.வெ.க தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்த மனு அளித்த நிலையில் தற்போது அண்ணாமலையும் சந்தித்துள்ளார்.
-
Dec 30, 2024 21:15 IST
மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை சென்னை போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அலிகான் துக்ளக் மீதான வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜாமீன் வழங்க காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது. காவல் துறையின் வாதத்தை ஏற்று ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி கோவிந்தராஜன் தள்ளுபடி செய்தது.
-
Dec 30, 2024 20:43 IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தி.மலை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 30, 2024 19:35 IST
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கித் தருவேன் - டி.ஐ.ஜி வருண்குமார்
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார்: “சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கித் தருவேன். என்னை மிரட்டிப் பார்க்க முடியாது; அதற்கான ஆள் நான் இல்லை” என்று கூறியுள்ளார்.
-
Dec 30, 2024 19:16 IST
“சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலம் தூது விட்டார்; நான் ஒப்புக்கொள்ளவில்லை - டி.ஐ.ஜி வருண்குமார்
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பரபரப்பு பேட்டி: “அவரை எப்படி சொல்லலாம் என்றால், மைக் முன்னால் புலி, மற்ற இடங்களில் எல்லாம் எலி. தொழிலதிபர் மூலம் நான் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன். டிண்ட் போட்ட காரில் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் அதை ஒத்துக்கொள்ளவில்லை, எனக்கு உடன்பாடு இல்லை. பொது வெளியில் மன்னிப்பு கேட்கட்டும் என்று கூறினேன்” என தெரிவித்துள்ளார்.
-
Dec 30, 2024 18:46 IST
த.வெ.க தொண்டர்கள் கைது; விஜய் கண்டனம்
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களை சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? என த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்
-
Dec 30, 2024 18:14 IST
ஆளுநர் ரவியை சந்திக்கும் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவன் இடத்தில் சந்திக்க வருகை தர உள்ளார்
-
Dec 30, 2024 17:40 IST
த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் விடுவிப்பு
சென்னை, தி.நகரில் அனுமதியின்றி பிரசுரம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட த.வெ.க நிர்வாகிகளையும் போலீசார் விடுவித்தனர்
-
Dec 30, 2024 17:23 IST
பொதுச்செயலாளர் ஆனந்த் கைது; த.வெ.க தொண்டர்கள் போராட்டம்
தி.நகரில் நோட்டீஸ் வழங்கிய த.வெ.க பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுக்கக் கோரி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்
-
Dec 30, 2024 16:32 IST
த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
சென்னை, தி.நகரில் கைது செய்யப்பட்ட த.வெ.க தொண்டர்களை பார்க்கச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார். விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த த.வெ.க-வினர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
-
Dec 30, 2024 16:29 IST
ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்
பிஎஸ்எல்வி - சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 9.58 மணிக்கு பதிலாக, இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
Dec 30, 2024 16:07 IST
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க தமிழ்நாடு அரசுக்கு, தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பதால், பாடங்களை நடத்தி முடிக்க முடியாத காரணத்தால், தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 30, 2024 16:01 IST
குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு
சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Dec 30, 2024 15:32 IST
எடப்பாடி பழனிசாமிக்கு கீதா ஜீவன் கண்டனம்
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர் செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்த போதிலும், சுய அரசியல் ஆதாயத்திற்காக, இல்லாத ஒன்றை இருப்பது போன்று அவர் வதந்திகளை பரப்புவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 30, 2024 15:10 IST
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும், 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 30, 2024 14:55 IST
சென்னையில் பட்டாசு வெடிக்க தடை
சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. 19,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்குகள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
-
Dec 30, 2024 14:47 IST
அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி
சென்னையில் அனுமதி பெறாமல், ஒழுங்கற்ற முறையில் இன்டர்நெட் நிறுவன கம்பங்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் 15 மண்டலங்களிலும் அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும். அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம். அனுமதித்ததை விட அதிக கம்பங்கள் நடப்பட்டிருந்தால் கம்பங்களுக்கு தலா ரூ.75,000 அபராதம். அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
-
Dec 30, 2024 14:31 IST
மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை: இன்று தீர்ப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை விபரங்களை மகளிர் நீதிமன்ற நீதிபதி சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார். உடல்நலக் குறைவாக உள்ள தனது தாய் தனியாக இருப்பதாகவும், அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் தன்னை மன்னிக்க வேண்டும் என நீதிபதியிடம் குற்றவாளி சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து தண்டனை அறிவிப்பு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
Dec 30, 2024 14:29 IST
ஞானசேகரனை காவலில் எடுக்கும் போலீஸ்
அண்ணா பல்கலை. சம்பவத்தில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
Dec 30, 2024 14:27 IST
மாணவி வன்கொடுமை - நோட்டீஸ் வழங்கிய த.வெ.க பெண் நிர்வாகிகள் கைது
அண்ணா பல்கலை. சம்பவம் தொடர்பாக சென்னை மாலின் அருகே நின்று நோட்டீஸ் வழங்கிய தவெக பெண் நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர் . கைதான தவெக பெண் நிர்வாகிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
-
Dec 30, 2024 13:53 IST
பரிசு வழங்கி கொண்ட ஆளுநர் - விஜய்
சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துவிட்டு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய். அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்
இதனிடையே, ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக விஜய் வழங்கினார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதியார் கவிதைகள் புத்தகத்தை விஜய்க்கு பரிசாக வழங்கினார்.
-
Dec 30, 2024 13:18 IST
ஆளுநருடன் விஜய் சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் உரையாடி வருகிறார். த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் விஜயுடன் உள்ளனர். அண்ணா பல்கலை. விவகாரம் மட்டுமின்றி, வேறு சில முக்கிய விவகாரங்கள் குறித்தும் விஜய் கோரிக்கை என தகவல் வெளியாகி இருக்கிறது.
-
Dec 30, 2024 13:14 IST
ஆளுநரை சந்தித்தார் விஜய்
முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திப்பு நடத்தி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை விஜய் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Dec 30, 2024 12:54 IST
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 எங்கே? - ராமதாஸ் கேள்வி
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 எங்கே?. கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 இந்த முறை காணவில்லை. தேர்தல் காலத்தில் ஒரு வேடம். மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Dec 30, 2024 11:53 IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. வலியுறுத்தல்
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தி உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் . முதலமைச்சர் தலையிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.
-
Dec 30, 2024 11:48 IST
அதிமுகவின் போராட்டம் தொடரும் - இ.பி.எஸ்
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும். வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?, யார் அந்த சார்?
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை போலீசார் கைது செய்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் திமுக அரசுக்கு கண்டனம். ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள், தகவல்களால் திமுக அரசு இந்த வழக்கில் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
Dec 30, 2024 11:03 IST
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து அ.திமு.கவினர் போராட்டத்தில் ஈட்பட்டனர். கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் சிவி சண்முகம் தலைமையில் அனுமதியின்றி போராட முயன்றதாக அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். -
Dec 30, 2024 11:00 IST
ஆளுநரை சந்திக்கிறார் விஜய்
த.வெ.க தலைவர் விஜய் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 30, 2024 10:36 IST
விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நேரில் விசாரணை. மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள மம்தா குமாரி, பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை. நேற்றிரவு சென்னை வந்த தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
-
Dec 30, 2024 09:53 IST
தேசிய மகளிர் ஆணைய குழு விசாரணை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்கத் தேசிய மகளிர் ஆணைய குழு இன்னும் சற்று நேரத்தில் பல்கலைக்கழகம் வருகை தர உள்ளனர். ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் நேரில் வந்து விசாரணை செய்ய உள்ளனர். மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவை எவை என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
Dec 30, 2024 09:31 IST
"ரஷ்யாவே விமானத்தை சுட்டு வீழ்த்தியது" - அஜர்பைஜான் அதிபர்
எங்கள் நாட்டு விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. ஆனால் வேண்டுமென்றே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நாங்கள் கூறவில்லை. கஜகஸ்தானில் அஜர்பைஜான் விமானம் விழுந்து நொறுங்கியதில் 38 பேர் உயிரிழந்த நிலையில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அல்யேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Dec 30, 2024 09:20 IST
புத்தாண்டில் உருவெடுக்கவுள்ள புதிய தலைமுறை!
2025 ஜனவரி 1 முதல் ஜென் பீட்டா எனும் புதிய தலைமுறை உருவெடுக்கவுள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் இப்படி அழைக்கப்படுவர் . இந்த தலைமுறையினர் பெரும்பாலும் ஜென் ஆல்பா மற்றும் ஜென் Z க்களின் வாரிசுகளாக இருப்பர். வரும் 2035 இல் உலக மக்கள் தொகையில் 16% பேர் ஜென் பீட்டாவாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
-
Dec 30, 2024 08:57 IST
விளையாட்டு ஓர் ஆசிரியர்..!
விளையாட்டு ஒரு மகத்தான ஆசிரியர். அது குழுவாக இணைந்து செயல்படுவதை எதிர்த்து போராடுவதை இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என் வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என ஈஷா கிராமோத்சவ விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உரையாற்றியுள்ளார்.
-
Dec 30, 2024 08:31 IST
கடலூர் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
-
Dec 30, 2024 08:27 IST
ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடையால் மாலை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வடையை மாலையாக கோர்த்து அலங்கரிக்கப்பட்ட சநேயரை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துரிசனம் மேற்கொண்டனர்.
-
Dec 30, 2024 08:23 IST
முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - புரளி
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு 12:15 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை கோயில் நடை திறந்த பின் சோதனை செய்ததில் புரளி என உறுதி செய்யப்பட்டது.
-
Dec 30, 2024 07:41 IST
அமெரிக்க முன்னாள் அதிபர் மறைவு
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தமது 100 வது வயதில் காலமானார். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர்.
-
Dec 30, 2024 07:36 IST
இன்று விண்ணில் பாயும் ராக்கெட்..!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி 60 ராக்கெட் இன்றிரவு 9.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 என தலா 220 கொலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
-
Dec 30, 2024 07:32 IST
"சபரிமலையில் இன்று மீண்டும் நடை திறப்பு"
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படுகிறது.
-
Dec 30, 2024 07:31 IST
"அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை"
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுகவிற்கு அண்ணாமலை பாராட்டு கூறியுள்ளார். ஒரு சாமானியனை பாதிக்கும் பிரச்சனைகளில் தலையிடாமல் அரசியலில் ஒரு போதும் இருக்க முடியாது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Dec 30, 2024 07:29 IST
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று தொடக்கம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது. திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும் விழாவில் சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10இல் நடைபெறுகிறது.
-
Dec 30, 2024 07:27 IST
அண்ணனாகவும்.. அரணாகவும்... விஜய் அறிக்கை
எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரணாகவும். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்: அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.