பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்: நடப்பாண்டு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வரும் புதன்கிழமை வீவாதம் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 06, 2025 05:46 ISTதிருச்சியில் இருந்து சவுதியின் தம்மாமிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
திருச்சியில் இருந்து சவுதியின் தம்மாமிற்கான நேரடி விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது. திருச்சியிலிருந்து தம்மாமிற்கான நேரடி விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று இந்திய நேரம் காலை 06:05-க்கு புறப்பட்டு, சவுதி உள்ளுர் நேரப்படி காலை 08:55-க்கு தம்மாம் கிங் ஃபஹத் விமான நிலையத்தில் தரையிறங்கும். மீண்டும் காலை 10:10-க்கு புறப்பட்டு இந்திய நேரம் மாலை 05:40-க்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடையும். இந்த புதிய விமான சேவை வாரத்தில் இரண்டு முறையாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
-
Jan 06, 2025 05:21 ISTஆவடி அருகே இளைஞர் வெட்டி படுகொலை
ஆவடி அருகே முன்பகை காரணமாக தினேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தினேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தினேஷை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகை காரணமாக தினேஷ் கொல்லப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Jan 06, 2025 05:14 ISTசி.பி.எம் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்கும் பெ. சண்முகம் பணி சிறக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்ப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் சண்முகம் அவர்கள், மலைவாழ் பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள் - விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு உழைத்ததற்காக தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர். சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்கும் அவர்களின் பணி சிறக்கட்டும்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Jan 05, 2025 21:28 ISTவிவசாயிகளுக்கு எதிரான கொள்கைளை எதிர்த்து போராடி வருபவர்; பெ.சண்முகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்ப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தமிழ் மாநில பொதுச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்துள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அன்பு, அடக்கம், அமைதி, சமரசமற்ற போராளி என்கிற பன்முகத் தன்மை கொண்ட மிகச்சிறந்த தலைவர். மலைவாழ் மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், வாச்சாத்தி போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியவர். சட்டப் போராட்டத்தை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் வரையிலும் இறுதி வரையிலும் சமரசமின்றி போராடி வெற்றி பெற்றவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக,மாநிலத் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர். விவசாயிகளுக்கு எதிரான கொள்கைளை எதிர்த்து போராடி வருபவர். மிகச்சிறந்த மக்கள் போராளி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
Jan 05, 2025 21:19 ISTபெ. சண்முகம் சி.பி.எம்-ன் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி - ஸ்டாலின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்ப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் சி.பி.எம்-ன் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 05, 2025 21:09 ISTபெ. சண்முகம் பணிகளால் இந்தியா கூட்டணி வலிமை பெறும் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்ப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பெ. சண்முகம் இயக்கப் பணிகளால் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெறும். மாணவர் பருவம் முதலே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர்; விவசாயிகள், பட்டியலின மக்களுக்காக போராடியவர் பெ. சண்முகம்” என்று பாராட்டியுள்ளார்.
-
Jan 05, 2025 20:02 ISTஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்தது. சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Jan 05, 2025 19:56 ISTசி.பி.எம் புதிய மாநிலச் செயலாலர் சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு, த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தங்களின் பணி வரும் காலங்களிலும் சமரசமின்றி தொடரட்டும்” என்று சி.பி.எம்-ன் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து தெர்வித்துள்ளார்.
-
Jan 05, 2025 19:06 ISTஆன்மீக அரசாக செயல்படுகிறது தி.மு.க அரசு - தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்: “திமுக அரசு ஆன்மீக அரசாக செயல்படுகிறது. தி.மு.க ஆட்சியில் பல்வேறு கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. அமைச்சர் சேகர்பாபு, செயல் பாபுவாக செயல்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.
-
Jan 05, 2025 17:39 ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி விதிகளின் படி 72 வயதுக்கு மேல் எந்த விதமான பொறுப்புகளிலும் இருக்க முடியாது என்பதால், தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
Jan 05, 2025 17:21 ISTமெட்ரோ ரயில் சேவை - 3வது இடத்தில் இந்தியா
மெட்ரோ ரயில் சேவையில் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 05, 2025 16:28 ISTஅல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்
ஹைதராபாத்தில் திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெறும் சிறுவனை, மருத்துவமனை சென்று சந்திக்க அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புடன் சிறுவனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும். நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்து, அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அல்லு அர்ஜுன் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
Jan 05, 2025 16:00 ISTபதவி விலக கே. பாலகிருஷ்ணன் விருப்பம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள கே.பாலகிருஷ்ணன், தனது பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சி அமைப்பு சட்ட விதிகளின் படி 72 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த விதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது எனக் கூறி, அடுத்த மாதம் தான் 72 வயதை எட்டுவதை சுட்டிக் காட்டி, பொறுப்பில் இருந்து விலக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Jan 05, 2025 15:19 IST"தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை குறைவு - ஏற்றுக் கொள்ள முடியாது"
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை குறைவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில், சீமான் கலந்து கொண்ட நிகழ்வில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பாரதிதாசன் பாடலையும் பாடி இருக்கலாம் என அவர் விமர்சித்துள்ளார்.
-
Jan 05, 2025 14:53 ISTதாம்பரத்தில் அலைமோதும் கூட்டம்
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது
-
Jan 05, 2025 14:35 ISTபல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்
பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. 20 நிமிடத்திற்கும் மேல் நின்றதால் தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் நடந்து சென்றனர்.
-
Jan 05, 2025 14:10 ISTகுஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து; 3 வீரர்கள் மரணம்
குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியில் இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Jan 05, 2025 13:26 ISTஎல்லைகள் விரிவாக்கம்; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம். முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதிமுடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
-
Jan 05, 2025 13:23 ISTரூ.4,600 கோடி மதிப்பீட்டில் நமோ பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் மோடி
உ.பி. சாஹிபாபாத் - டெல்லி நியூ அசோக் நகர் இடையே ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நமோ பாரத் ரயிலில் பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்
-
Jan 05, 2025 13:22 ISTஅண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மரியாதை
பிறந்தநாளையொட்டி, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மரியாதை அஞ்சலி செலுத்தினார்
-
Jan 05, 2025 12:48 ISTமம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Jan 05, 2025 12:29 ISTஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு - ஸ்டாலின்
சிந்துவெளி எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
-
Jan 05, 2025 12:12 ISTசென்னையில் ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தம்
சென்னையில் இருந்து 89 பேருடன் இன்று காலை கொச்சிக்கு புறப்பட்ட விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறால் வானில் பறக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டது
-
Jan 05, 2025 11:47 ISTஸ்டாலின் அறிவிப்பு
கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jan 05, 2025 11:46 ISTசிந்துவெளி நாகரிகம் - ஸ்டாலின் பரிசு அறிவிப்பு
“சிந்துவெளி எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு” சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jan 05, 2025 11:45 ISTசிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது - ஸ்டாலின்
“சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது என நூற்றாண்டுக்கு முன் ஜான் மார்ஷல் சொன்னது இன்று வலுப்பெற்றுள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jan 05, 2025 10:55 ISTநடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ்
கிம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
Jan 05, 2025 10:49 ISTஅவதூறு கருத்து: ABVP நிர்வாகிகளுக்கு நூதன தண்டனை
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி நிர்வாகிகள் இருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் சேவை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 05, 2025 10:45 IST59 மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம் யார்டில் நடைமேம்பால கட்டுமானப் பணிகள் நடப்பதால் சென்னை - தாம்பரம் வழித்தடத்தில் 59 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரை - பல்லாவரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
-
Jan 05, 2025 10:19 ISTதனியார் பள்ளி தாளாளர் மருத்துவமனையில் சிகிச்சை
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்ததில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள தனியார் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Jan 05, 2025 10:16 ISTஏடிஎம் கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ATM இயந்திரத்தை உடைத்து ₹7 லட்சம் கொள்ளை சிசிடிவி கேமராவை உடைத்து, மின் இணைப்பை துண்டித்து திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jan 05, 2025 10:14 ISTகாய்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் வெளியாகி உள்ளது. பெரிய வெங்காயம் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ 17 ரூபாய்க்கு விற்பனை சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாய் வரையிலும், முருங்கைக்காய் கிலோ 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
-
Jan 05, 2025 10:04 ISTமுதல் முறையாக வாய்ப்பை இழந்த இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக இந்தியா இழந்தது. 2019 முதல் 2021 மற்றும் 2021 முதல் 2023 ஆகிய இரு முறையும் தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியா தோல்வி அடைந்தது.
-
Jan 05, 2025 09:20 ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
10 ஆண்டுகளாக தக்கவைத்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்த்ரேலியாவிடம் இந்தியா இழந்தது. சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி மூலமாக 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.
-
Jan 05, 2025 09:18 ISTதனக்கு கோயில் கட்டிய ரசிகரை நேரில் அழைத்து சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
மதுரையில் தனக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்ய்ம் முன்னாள் ராணுவ வீரரும் தீவிர ரசிகருமான கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். கார்த்திக் குடும்பத்தினருக்கு தனது இல்லத்தையும் சுற்றிக் காட்டினார்.
-
Jan 05, 2025 09:14 ISTதலைமைச் செயலகம் வெடிகுண்டு மிரட்டல் - புரளி
தலைமைச் செயலகம் மற்றும் டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்துள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jan 05, 2025 08:45 ISTபட்டாசு ஆலை உரிமையாளர்
விருதுநகர் அருகே 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் சசிபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jan 05, 2025 08:42 ISTமேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1307 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.52 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 91.130 டி.எம்.சி. ஆக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
-
Jan 05, 2025 08:40 ISTமீண்டும் மழையா?
தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
-
Jan 05, 2025 08:40 ISTசிறப்பு ரயில் முன்பதிவு
பொங்கல் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே அறிவித்த 5 சிறப்பு ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இன்று காலை 8 மணிக்கு ஆன்லைன் மற்றும் ரயில் நிலைய கவுண்டரில் முன்பதிவு தொடங்கியது.
-
Jan 05, 2025 08:10 ISTஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்
கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
Jan 05, 2025 08:08 ISTஆம்னி பேருந்துகளை கண்காணிக்க ஆணையரகம்
ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைத்துள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை.
-
Jan 05, 2025 08:06 ISTபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
விழுப்புரத்தில் மாநில அளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள் என 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
-
Jan 05, 2025 08:04 ISTதோழமைக்கான இலக்கணம் அல்ல - திமுக நாளேடு முரசொலி
கே. பாலாகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணம் அல்ல; திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? என மார்க்சிஸ்ட் மாநாட்டில் அக்கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசிய நிலையில் தி.மு.க நாளேடு முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jan 05, 2025 07:40 ISTதாம்பரம்: ரயில் சேவையில் மாற்றம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடை மேம்பால பணி காரணமாக ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையே ரயில்கள் இயக்கம் (காலை 7 - மாலை 4 ) வரியும் செங்கல்பட்டு ரயில் கூடுவாஞ்சேரி வரையே இயக்கப்படும் (11-4) வரியும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 05, 2025 07:38 ISTதமிழ்நாடு அரசின் 9 விருதுகள் அறிவிப்பு
திருவள்ளுவர் விருது - புலவர் மு.படிக்கராமு
தந்தை பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன்
அம்பேத்கர் விருது - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
பேரறிஞர் அண்ணா விருது - எல்.கணேசன்
கலைஞர் விருது - முத்து வாவாசி
பாரதியார் விருது - கவிஞர் கபிலன்
பாரதிதாசன் விருது - பொன்.செல்வகணபதி
திருவிக விருது - மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - வே.மு.பொதியவெற்பன் ஆகியோருக்கு தமிழக அரசின் 9 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. -
Jan 05, 2025 07:35 IST44 மணி நேர இ.டி சோதனை நிறைவு
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
-
Jan 05, 2025 07:34 ISTநகைக்கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை
திண்டுக்கல்லில் 3 நகைக் கடைகள் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் 2 வீடுகளில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.