பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 26, 2024 23:50 IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மரணம்: 7 நாட்கள் துக்க அனுசரிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாளை (டிசம்பர் 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
-
Dec 26, 2024 22:37 IST
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்
-
Dec 26, 2024 22:21 IST
ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு. ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்கு
-
Dec 26, 2024 22:21 IST
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Dec 26, 2024 20:26 IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரும் இ.பி.எஸ்
மாணவியின் தனிப்பட்ட விபரங்களுடன் எப்.ஐ.ஆர் காப்பி வெளியானது எப்படி? கைதான ஞானசேகரனை இத்தனை நாள் வெளியில் நடமாடவிட்டதற்கு காவல்துறையே முழு பொறுப்பு. எவ்வித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
Dec 26, 2024 19:29 IST
எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை: சென்னை காவல் ஆணையர் அருண்
"காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆய்வுக் கூட்டங்களில் முதலமைச்சர் கூறியது. எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. அண்ணா பல்கலை. வளாகத்தில் 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது என சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.
-
Dec 26, 2024 19:26 IST
பாலியல் புகார்களுக்கு `பிங்க் பெட்டிகள்: அமைச்சர் தகவல்
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு, `பிங்க் பெட்டிகள்' அமைத்தது தமிழக அரசு. 5,498 இடங்களில் பிங்க் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
-
Dec 26, 2024 18:34 IST
பாலியல் புகாரில் சிக்கிய ஞானசேகரன் குறித்த புதிய வீடியோ வைரல்!
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன், ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம், கோட்டூர்புரம் லேக் வியூ சாலையில் காரை நிறுத்தியவரிடம் தகராறில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
-
Dec 26, 2024 17:24 IST
தி.மு.க-வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி: “தி.மு.க-வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். நாளை காலை என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 26, 2024 16:54 IST
மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் படிக்கும் போது இரத்தம் கொதிக்கிறது - அண்ணாமலை ஆவேசம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “காவல் துறைக்கு தெரியாமல் எப்படி FIR வெளியானது. பாதிக்கப்பட்ட பெண் தவறு செய்ததாக FIR இல் பதிவு செய்து உள்ளார்கள்.வெட்கமா இல்லையா உங்களுக்கு. பாதிக்க பட்ட மாணவியின் குடும்பத்தை FIR வெளியிட்டு அசிங்க படுத்தி உள்ளார்கள். FIR படிக்கும் போது இரத்தம் கொதிக்கிறது. காரி துப்பும் வகையில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட துறை அமைச்சர் ரகுபதி வெட்கப்பட வேண்டும். இன்னும் எத்தனை நாள் தான் வடக்கு, தெற்கு என பேசி கொண்டே இருப்பீர்கள். வெட்கமா இல்லையா உங்களுக்கு. தி.மு.க அரசுக்கு எதிராக நாளை முதல் 48 நாள் விரதம் இருக்க போகிறேன். தி.மு.க-வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். எனக்கு நானே நாளை காலை சாட்டை அடி கொடுக்க போகிறேன். திமுக அரசுக்கு எதிராக இனி போராட்டம் எல்லாம் கிடையாது. இனி வேறு மாதிரி டீல் செய்யப்படும். மாவுகட்டு எல்லாம் ஒரு தண்டனையா? 10 நாளில் தண்டனை பெற்று தரமுடியுமா? நிர்பயா நிதி ₹1000 கோடி நிதி எங்கே? ஒரு CCTV வயர் கூட சரி செய்ய முடியவில்லையா?” என்று அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Dec 26, 2024 16:37 IST
அண்ணா பல்கலை. வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என சொல்ல வெட்கமாக இல்லையா? - அண்ணாமலை ஆவேசம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? சிசிடிவி கேமராவிற்கு ஒயர் இணைப்பு இல்லை என்று கூற வெட்கமாக இல்லை?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Dec 26, 2024 16:02 IST
பெண்களை கிண்டல் செய்த இளைஞரைத் தாக்கிய பெண் போலீஸ்; இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து
பேருந்து நிலையத்தில் பெண்களை கிண்டல் செய்த வழக்கில் கைதான இளைஞரை தாக்கியதாக, பெண் தலைமைக் காவலர் ₹30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. திருச்சி பேருந்து நிலையத்தில் பெண்களை கிண்டல் செய்த பிரபு என்பவர் கைதாகி பின்னர் பிணையில் வெளியே வந்த பிறகு, தன்னை கைது செய்த பெண் காவலர் ஹேமலதா உள்ளிட்ட போலீசார் தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த ஆணையம், ஹேமலதா, பிரபுவுக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவிட, இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஹேமலதா முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்நோக்கத்தோடு ஹேமலதா செயல்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை எனக்கூறி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
-
Dec 26, 2024 15:25 IST
நூற்றாண்டு காணும் நல்லக்கண்ணு: போற்றிப் புகழ்ந்து வணங்குவோம் - விஜய்
விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர்.
சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.
தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்.
தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான திரு.நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.
நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 26, 2024 15:18 IST
அண்ணா பல்கலை. மாணவர்கள், அலுவலர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக செய்க்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே செல்வது தாமதமாக வருவதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள், அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Dec 26, 2024 14:50 IST
இலவச வேட்டி சேலை - கைத்தறி துறை அறிவுறுத்தல்
பொங்கல் இலவச வேட்டி சேலையை ஐன.10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என அலுவலர்களுக்கு கைத்தறிதுறை அறிவுறுத்தி உள்ளது.
-
Dec 26, 2024 14:31 IST
டிச.31 வரை மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் டிச.31 வரை மிதமான மழை நீடிக்கும். தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 26, 2024 13:54 IST
அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது - கோவி.செழியன்
பாதிக்கப்பட்ட மாணவி நடந்த விஷயங்களை முன்பே பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம் தெரிவித்திருக்க வேண்டும். முன்பே தெரிவித்திருந்தால் இன்னும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
பாதுகாப்பு பிரச்சினை, அச்ச உணர்வு காரணமாக மாணவி பின்னர் புகார் அளித்துள்ளார். 2 தினங்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு, பல்கலைக் கழகம், காவல்துறை விரைந்து செயல்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
-
Dec 26, 2024 13:51 IST
அன்புமணி கேள்வி
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விவசாய நிலத்தை கூட எந்த அரசும் கையகப்படுத்த கூடாது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை தடுக்க எந்த எல்லைக்கும் பா.ம.க செல்லும். சுரங்க ஏலத்திற்கு முன்பாக மத்திய அரசுக்கு எந்த எதிர்ப்பையும் மாநில அரசு தெரிவிக்காதது ஏன்?" - என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Dec 26, 2024 12:59 IST
கைதான நபர் தி.மு.க உறுப்பினர் இல்லை - அமைச்சர் ரகுபதி
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து புகைப்படம் எடுக்கலாம். அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது. குற்றவாளிக்கு நிச்சயமாக தண்டனை பெற்றுத் தரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார்.
-
Dec 26, 2024 12:48 IST
அண்ணா பல்கலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
அண்ணா பல்கலைக் கழக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக போராட்டம் காரணமாக, சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வாகனங்களால் ஓட்டுநர்கள் சிரமம். நெரிசலை குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
Dec 26, 2024 12:25 IST
திமுக அரசு தான் குற்றவாளிகளை காப்பாற்றுகிறதோ என அச்சம்- இ.பி.எஸ்
திமுக அரசு தான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என அச்சம். சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலை. பாலியல் சம்பவமே சான்று. கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன.
துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
Dec 26, 2024 12:22 IST
அண்ணாமலை கண்டனம்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பான எப்ஐஆர் கசிவு உரிமைகளுக்கு எதிரானது. குற்றவாளி திமுகவை சேர்ந்தவன் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய எப்.ஐ.ஆர் வெளியே கசிந்துள்ளது. மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசுக்கும் காவல்துறைக்கும் பொறுப்பான முதலமைச்சருக்கு கண்டனம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Dec 26, 2024 12:15 IST
அ.தி.மு.க.வினர் கைது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க அரசை கண்டித்து பல்கலை வளாகம் முன் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வண்டியில் ஏற்றினர்.
-
Dec 26, 2024 11:57 IST
கடலூர் - புதுவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்பன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஆண்டையர் பாளையம் கிராம மக்களுக்கு கொம்பன் பஞ்சாயத்து சார்பில் ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு அளவை தற்போது குறைத்து தனிநபர் ஒருவருக்காக தாரை வாத்து கொடுப்பதை கண்டித்து இன்று காலை தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பில் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு எஸ்.பி பக்தவச்சலம் கிராம நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் .
-
Dec 26, 2024 11:56 IST
"புகார் மனு பெறப்பட்ட 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது" - அமைச்சர் கோவி.செழியன்
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தின்போது குற்றவாளிகளுக்கு மாநில அரசே துணை நின்றது. ஆனால் இப்போது அண்ணா பல்கலை. மாணவியிடம் புகார் மனு பெறப்பட்ட 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் கோவி. செழியன் பேட்டி அளித்துள்ளார்.
-
Dec 26, 2024 11:52 IST
பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை - கனிமொழி
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை என்றும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் தி.மு.க எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
-
Dec 26, 2024 11:42 IST
குகேஷை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
உலக செஸ் சாம்பியன் குகேஷை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
-
Dec 26, 2024 11:40 IST
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
-
Dec 26, 2024 11:14 IST
அண்ணா பல்கலை. விவகாரம் - இபிஎஸ் பதிவு
"சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Dec 26, 2024 11:03 IST
கனிமொழி கண்டனம்
"சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்." என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Dec 26, 2024 11:00 IST
ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரம்
ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து கைதானவர்களின் உறவினர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் பதிவான காட்சிகள் யாருக்காவது அனுப்பப்பட்டுள்ளது என்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Dec 26, 2024 10:44 IST
அண்ணா பல்கலை. முன் போராட்டம்
மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
-
Dec 26, 2024 10:43 IST
"கொள்கை கூட்டணியல்ல; இது நிரந்தர கூட்டணி" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லகண்ணு என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறினார். கொள்கை கூட்டணியாக மட்டுமில்லாமல் நிரந்தர கூட்டணியாக இருக்கிறோம். 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் அளவுக்கு கூட்டணி அமைந்திருக்கிறது.
-
Dec 26, 2024 10:22 IST
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.53 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.53 அடியாக உயர்ந்துள்ளது. இந்தாண்டில் 3 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது.
-
Dec 26, 2024 10:20 IST
சுனாமி ஆறாத வடு
20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஊர்வலங்கள் நடத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
-
Dec 26, 2024 09:49 IST
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச.26) காலை வலுவிழந்தது.
-
Dec 26, 2024 09:47 IST
நூற்றாண்டு காணும் தகைசால் தமிழர் நல்லகண்ணு
தோழர் நல்லக்கண்ணுவின் 100 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
-
Dec 26, 2024 09:45 IST
பாஜக இன்று ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துமாறு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
-
Dec 26, 2024 09:43 IST
மாணவி வன்கொடுமை - அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் வன்கொடுமை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Dec 26, 2024 09:42 IST
சுனாமியால் இறந்தோருக்கு தமிழ்நாடு ஆளுநர் அஞ்சலி
2004 ஆழிப்பேரலையில் உயிரிழ்ந்தோருக்கு மீனவ மக்களுடன் அமைதிப் பேரணியில் பங்கேற்று சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
Dec 26, 2024 08:54 IST
சிறுமியை மீட்க NDRF, SDRF போராட்டம்
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை காப்பாற்ற தொடர் முயற்சி நடைபெற்று வருகிறது. சிறுமியை மீட்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 26, 2024 08:52 IST
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து “இனி இதுபோல நடக்காமல் இருக்க, பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
Dec 26, 2024 08:01 IST
மழை நிலவரம் - பிரதீப் ஜான் ரிப்போர்ட்
சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Dec 26, 2024 07:57 IST
காங். காரிய கமிட்டி கூட்ட ஏற்பாடுகள்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. அம்பேத்கர், கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோரின் பிரம்மாண்ட பேனர்களுடன், வண்ண விளக்குகளுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
-
Dec 26, 2024 07:54 IST
குகேஷிற்கு Watch பரிசு கொடுத்த SK
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்து அழகான வாட்ச் ஒன்றையும் பரிசு அளித்தார்.
-
Dec 26, 2024 07:37 IST
குமரி - சுனாமி நினைவு தினம்
20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
-
Dec 26, 2024 07:35 IST
தங்க அங்கியில் தீபாராதனை
சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணுவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
-
Dec 26, 2024 07:34 IST
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.