சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்றும் 5-வது நாளாக சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 167 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இன்று (திங்கள் கிழமை) 5-வது நாளாக 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், இளவரசியின் மகன் விவேக் இல்லம், தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அங்குள்ள வரவு, செலவு கணக்குகள், போலி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் உள்ளதா என வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, சசிகலா குடும்பத்தினருக்கு சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பெயரளவிலான நிறுவனங்களை ஆரம்பித்து அதன்மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்களையும் இந்த சோதனையில் வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாலை 3.30 : சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் முழுமையாக நிறைவுபெற்றன. மொத்தம் 106 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். ஆக, இதில் இன்னும் ஒரு வாரத்திற்காவது ஐ.டி. அதிகாரிகளுக்கு வேலை இருக்கிறது.
பகல் 1.30 : மன்னார்குடியில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்க சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பகல் 1.00 : சென்னையை அடுத்த படப்பை மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களிலும் சிறிய இடைவெளிக்கு பிறகு ஐ.டி. அதிகாரிகள் சோதனையை தொடர்கிறார்கள்.
பகல் 12.15 : சசிகலாவின் உறவினரும் இளவரசியின் மருமகனுமான டாக்டர் சிவகுமார் இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
பகல் 11.30 : சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வருகை தந்தார். கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் அவரது இல்லத்தில் நடந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
பகல் 11.00 : இன்றுடன் ரெய்டை முடித்துக்கொண்டு, சசிகலா உறவு வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
காலை 10.00 : டிடிவி தினகரன் அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியின் பெங்களூரு இல்லத்தில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் இன்று புகழேந்தி ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
காலை 9.30 : கடந்த 9-ம் தேதி காலை 5.30 மணிக்கு ஜெயா டிவி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டை ஆரம்பித்தது. இன்று இடைவெளி இன்றி 100 மணி நேரத்தை கடந்து ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் இத்தனை இடங்களில் இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக ஐடி ரெய்டு நடைபெறுவது ரெக்கார்ட் பிரேக்!
காலை 9.00 : சென்னை தி.நகரில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இல்லத்தில் 5-வது நாளாக ரெய்டு நடத்தி வரும் அதிகாரிகள், இன்றுடன் ரெய்டு முடிவுக்கு வரும் என்றார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.