தமிழக அரசின் பட்ஜெட்! வேளாண்மைத் துறைக்கு ரூ. 8,916 கோடி ஒதுக்கீடு!

2018-19ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு

2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், சட்டமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு போல வரியில்லா பட்ஜெட் தருமா? மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தும் அறிவிப்புகள் அதில் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலான பிறகு வரும் முதல் பட்ஜெட் இது. ஜி.எஸ்.டி.-க்குப் பிறகு, மாநில அரசுக்கு அதிக வருவாய் தரும் வணிகவரி வருவாயில் பாதியை, மத்திய அரசுக்குத்  தரவேண்டியுள்ளதால், இந்த ஆண்டில் வருவாய் குறையும் என கருதப்பட்டது. மாறாக, வருவாய் குறையவில்லை. ஜி.எஸ்.டி மூலம்,  2017 நவம்பர் வரை, 57,345 கோடி ரூபாய், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. வணிக வரி மூலம் கடந்த ஆண்டு கிடைத்த 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, ஜிஎஸ்டி-யும் வருவாயை ஈட்டித் தரும் என தெரியவந்துள்ளதால், நிதித்துறையினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

எனினும், இதர வருவாய்களில் முக்கியமான பத்திரப்பதிவு பெருமளவு குறைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வால், கூடுதலாக, 14,719 கோடி ரூபாய் அரசுக்கு செலவினம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கும், மின் வாரிய ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு என பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. மேலும், ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதும், வருவாயை குறைத்திருக்கும்.

இவற்றுடன், 3.15 லட்சம் கோடி ரூபாயாக உள்ள மாநில கடன்சுமைக்கு, வட்டியாகவே மாதம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில், எப்படிப்பட்ட பட்ஜெட் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேளாண் சாகுபடி, வறட்சி போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால். விவசாய நலத்திட்டங்களுடன், உச்ச நீதிமன்றம் கூறியபடி நிலத்தடி நீரை பயனுள்ளதாக பயன்படுத்த போதிய திட்டங்களும் இடம்பெற, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பும்  எழுந்துள்ளதுநீர் நிலைகளை ஆழப்படுத்தவும், புதிதாக உருவாக்கவும், முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பஸ் கட்டண உயர்வுடன், மின் கட்டண உயர்வு குறித்த தகவல்களால் மக்கள் அடைந்துள்ள அச்சத்தை பட்ஜெட்டில், அரசு போக்கவேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்புக்கு, பெயரளவில்  திட்டங்கள் இருந்தாலும், அவற்றை முழுமூச்சாக செயல்படுத்தவேண்டும் என, கல்வியாளர்கள் கோருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையினர், அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் முறைப்படுத்துவதை எளிமைப்படுத்தவும், மணல்  தட்டுப்பாடின்றி, குறைந்த விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். தங்கள் துறைக்கு, உரிய சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்று, தொழில் துறையினர் கோருகின்றனர்.

தமிழக அரசின் பட்ஜெட் Live Updates இங்கே,

பகல் 12.55 – மொத்த உற்பத்தி மதிப்பு உயர்வு

நடப்பு நிதியாண்டில் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.14,45,227 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு(GSDP) ரூ.16,89,459 கோடியாக உயரும் எனக் கணிப்பு. வித்தியாசம் என்பது ரூ.2,44,232 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.

பகல் 12.45 – ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ. 513.66 கோடியும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் மானியத்துக்கு ரூ. 87.80 கோடி. ரூ.12,301 கோடியில் சென்னை சுற்றவட்டச் சாலை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல். சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.3881.66 கோடி ஒதுக்கீடு.

பகல் 12.42 – பழங்குடியினர் நலன்

சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.265 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.333.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வித்தியாசம் என்பது 68.82 கோடியாக உள்ளது.

பகல் 12.35 – அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி நிதி ஒதுக்கீடு. பாரம்பரிய கல்லூரிக் கட்டடங்களை புதுப்பிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு. விவசாயம், இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக ரூ.7,537.78 கோடி ஒதுக்கீடு.

பகல் 12.28 – தூய்மை தமிழகத்திற்கான இயக்கம் 17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன,

பகல் 12.15 – உணவுப்பொருள் மானியம்

சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.5500 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வித்தியாசம் என்பது 500 கோடியாக உள்ளது.

பகல் 12.10 – அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும். அத்திக்கடவு- அவிநாசி குடிநீர் வழங்கல், நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த விரைவில் அரசு அனுமதி. அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.250 கோடி மானியமாக வழங்கப்படும். விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு. காவல்துறைக்கு ரூ. 7,877 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 16 பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும். பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டப்பணிகள் ரூ. 1,244.35 கோடியில் மேற்கொள்ளப்படும். ரூ.2,658.58 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். சத்துணவு திட்டம்- ரூ. 1,747.72 கோடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு ரூ. 2,146.30 கோடி ஒதுக்கீடு.

பகல் 12.05 – நெடுஞ்சாலைத்துறை

சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.10,067 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.11,073 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் என்பது 1006 கோடியாக உள்ளது.

பகல் 12.00 – 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டு மானியம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

காலை 11.55 – இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு. விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி. உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது. வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும். வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ.988 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ.973 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் என்பது 15 கோடியாக உள்ளது. குமரி, நெல்லை, மதுரை, கோவை மருத்துவக் கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும்.

சமூக நலத்துறைக்கான தமிழக பட்ஜெட்டில் ரூ.5,611.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி ஒதுக்கீடு. வானூர்திப் பூங்கா, பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடம் அமைக்க சிறப்புக்கவனம் செலுத்தப்படும். நீர்வள, நிலவள இரண்டாம் கட்ட திட்டத்திற்காக ரூ. 655.29 கோடி நிதி ஒதுக்கீடு. எஞ்சியுள்ள பயனாளிகளுடன் கூடுதலாக ஒரு லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடைவர்.

காலை 11.45 – தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி ஒதுக்கீடு. நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி ஒதுக்கீடு. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.11,073.66 கோடி ஒதுக்கீடு. இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு. குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு.

காலை 11.40 – மெட்ரோ ரயிலின் 107.55 கி.மீ. நீள வழித்தடம் அமைக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது கோவையில் டைசல் உயிர்ப் பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி. . கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும். உயர் கல்வித்துறைக்கு ரூ.4,620 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்.

காலை 11.38 – மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2 ஆவது மாநிலம் தமிழகம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு. மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் உருவாக்கப்படும். ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும். ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும். ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைப்பு.

Deputy CM OPS Budget filing

பட்ஜெட் தாக்கல் செய்துவரும் ஓ.பி.எஸ்

காலை 11. 35 – ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும். மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காலை 11.30 – விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.

காலை 11.28 – ரயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி ஒதுக்கீடு. குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு. ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும்.

காலை 11.25 – தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம், மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும். 3 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க இலக்கு.

காலை 11.20 – குறைந்த வருவாய் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.2,894.63 கோடியில் 20,095 வீடுகள் கட்டப்படும். கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.

காலை 11.15 – குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு. தென் சென்னையில் ரூ.1,245 கோடியில் வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

காலை 11.10 – மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ,60.58 கோடி ஒதுக்கீடு. திருமண உதவி திட்டத்திற்கு 724 கோடி ஒதுக்கீடு.

காலை 11.05 – 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள 4,593 பழைய பேருந்துகள் புதியதாக மாற்றப்படும். நலிந்த கலைஞர்களுக்காக மாதாந்திர நிதியுதவி ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

காலை 11.00 – மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு.

Deputy CM OPS Budget announcement

பட்ஜெட் உரையை வாசித்து வரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்

காலை 10.58 – 2018-19ல் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக அரசு இலவசமாக வழங்கும்

காலை 10.55 – 26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டம் ரூ.920 கோடியில் செயல்படுத்தப்படும்.

காலை 10.50 – காலிப் பணியிட நிரப்புதல், ஊதிய உயர்வு காரணமாக சம்பளச் செலவினம் 10.5% அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.22, 394 கோடி ஒதுக்கப்பட்டது.

காலை 10.45 – 2018-19ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு. ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ.25,362 கோடி ஒதுக்கீடு.

காலை 10.40 – 2018-19 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக உயரும் என கணிப்பு. ஆயத்தீர்வைகளின் மூலம் ரூ.6,998 கோடி வரி வருவாய் கிடைக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு. மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு. மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிப்பு

காலை 10.35 – பன்னீர் செல்வம் தனது உரையில், “தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி; செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி. பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி” என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

காலை 10.32 – பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

காலை 10.30 – 2018-19  நிதியாண்டின் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

காலை 10.23 – பட்ஜெட் தாக்கலுக்காக முதல்வரும், துணை முதல்வரும் சட்டப்பேரவைக்குள் வந்துள்ளனர்.

CM - Deputy CM For TN Budget 2018-19

பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த துணை முதல்வருடன், முதல்வர் பழனிசாமி

காலை 10.05 – தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.

காலை 10.00 – செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக பெரும்பான்மை இருக்கிறது. ஆட்சி அமைக்க முடியவில்லையே என்ற துக்கத்தில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்துள்ளனர். அதிமுக என்ற சிங்கத்தின் மீது டிடிவி என்ற ஒரு கொசு உட்கார்ந்து சென்றுவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

காலை 09.50 –  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அவர் புறப்படும் போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

காலை 09.30 – தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை .

DMK MLA's in Black shirt

கருப்பு சட்டையில் வந்த திமுக உறுப்பினர்கள்

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close