கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான கோவை பிரியாணி உணவகத்தில் இன்று மதியம் வாடிக்கையாளர் அருந்திய உணவில் பல்லி இருந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அங்கு மதிய உணவு உட்கொண்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தாங்களாகவே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் வீசிவி லே அவுட் பகுதியில் கோவையின் பிரபல உணவகமான கோவை பிரியாணி ஹோட்டல் அமைந்து உள்ளது.
அங்கு மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து உணவு அருந்தி செல்கின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் வந்து இன்று பிற்பகல் அங்கு பிரியாணி உட்கொண்டு உள்ளார்.
அப்போது பிரியாணிக்கான குழம்பு வாங்கிய போது அந்த குழம்பில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதை அடுத்து பல்லியை காண்பித்து உணவக ஊழியர்களிடம் முறையிடவே உணவக ஊழியர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பல்லியை அப்புறப்படுத்த முற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர், உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அங்கு வந்த உணவகம் மேலாளர் இது குறித்து ஊழியர்களிடம் விசாரிப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் அங்கு உணவு அருந்தி கொண்டு இருந்த மற்ற வாடிக்கையாளர்களிடம் பல்லி கிடந்தது குறித்த தகவலை கூறவே அனைவரும் உணவருந்துவதை விட்டு பாதியில் எழுந்து அங்கேயே வாந்தி எடுக்க துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கு இருந்தவர்கள் ஒவ்வொருவராக தாங்கள் வந்த வாகனத்திலேயே உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கும் அரசு மருத்துவமனைக்கும் சென்று அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அங்கு உணவு அருந்திய வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.