தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு (Teachers) 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என தமிழக அரசு இன்று (ஜூலை 8) தாராள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தேர்தலில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். அதே போல, பதவியேற்றதும் அந்த திட்டத்தை நிறைவேற்ற கையெழுத்திட்டார். மே மற்றும் ஜூன் மாதத்தில் தலா ரூ.2,000 என குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக் அல்லது கார் வாங்கவும் இந்த கடன் உதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவியை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கல்வித்துறை பணியாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான கடன் உதவி தொடர்பான அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு அவர்களிடம் இருந்து மிகக் குறைவான வட்டி பெறப்படும். தமிழக அரசின் தாராளமான இந்த புதிய அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”