ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர், துணை தலைவர் தேர்தலில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை விடுத்து கட்சி மாறி வாக்களித்த சம்பவங்கள் கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த டிசம்பரில் 27, 30 தேதிகளில் நடைபெற்றது.
தமிழகத்தில், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலும் அதிமுக தலைமையிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதே கட்சிகள் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்து போட்டியிட்டன.
ஊரக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த 2 ஆம்தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜனவரி 6ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மறைமுகமாக ஊராட்சி துணை தலைவரையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மறைமுகமாக ஊராட்சி ஒன்றிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து மாவட்ட ஊராட்சி பெருந்தலைவரை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தம் 515 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க. 244 இடங்களிலும், அ.தி.மு.க. 214 இடங்களிலும் வெற்றி பெற்றன.
5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 2099 இடங்களிலும், அ.தி.மு.க. 1789 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அதிக இடங்களைப் பிடித்திருந்த தி.மு.க. கூட்டணி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் என இரு பதவிகளிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று நடந்த மறைமுக தேர்தல் முடிவில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.
இதில் சில இடங்களில், சில உறுப்பினர்கள் தமது கட்சி கூட்டணியையெல்லாம் பார்க்காமல் பதவிதான் முக்கியம் என்று கூட்டணியை எல்லாம் பார்க்காமல் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
27 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீதி உள்ள 26 மாவட்ட ஊராட்சிகளில் 14 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதில் ஒரு இடம் பாமகவுக்கு சென்றது. திமுக கூட்டணி 12 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
1. திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுக 11, காங்கிரஸ் 2 என திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக 8 மற்றும் தமாகா 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.
திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்ததால் யாரிடமும் ஆதரவு கோராமல் அக்கூட்டணி கட்சியினர் அமைதியாக இருந்தனர். இதையடுத்து, திமுக வேட்பாளராக கலைவாணி அறிவிக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி கோரியது. ஆனால், அதற்கு திமுக மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஊராட்சி பெருந்தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலட்சுமி தமிழ்செல்வன் 12 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது, திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அதிமுகவுக்கு திமுக கூட்டணியில் இருந்து 3 பேர் மாற்றி வாக்களித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக ஆதரவுடன் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேலுவின் மனைவி உமாமகேஸ்வரியும், திமுக சார்பில் கலைவாணியும் போட்டியிட்டனர்.
இருவருக்கும் தலா 11 வாக்குகள் கிடைத்ததால் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து, குலுக்கல் முறையில் உமாமகேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2. கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தோ்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிட்டதில் திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுகவில் அய்யப்பன் வெற்றி பெற்றாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவா், துணைத் தலைவா்களுக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அதிமுக 4, பாஜக 5, திமுக 3, நாம் தமிழா், சுயேச்சை தலா 1 வாா்டில் வெற்றி பெற்றனா். அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் இருப்பதால் அதிமுக சாா்பில் அய்யப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். எனினும், கூடுதல் வாா்டுகளில் வெற்றி பெற்றிருப்பதால் தலைவா், துணைத் தலைவா் தோ்வுதலைவா் பதவியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பாஜக சாா்பில் தலைவா் பதவிக்கு தா்மலிங்க உடையாா் போட்டியிட்டாா். இதில், அய்யப்பன் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் இரு துருவங்களாக இருந்தாலும், ராஜாக்கமங்கலத்தில் அதிமுக - திமுக உறுப்பினர்கள் சேர்ந்து பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளனர். இது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமது கூட்டணியை யெல்லாம் பார்க்காமல் பதவிதான் முக்கியம் என்று மறைமுக தேர்தலில் கட்சி மாறி வாக்களித்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.