தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக -பாஜக இடையே இடப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (செப்டம்பர் 19) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2019ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 2020ம் ஜனவரியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பணிகள் நிறைவடையாததால், இந்த 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், அண்மையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 9 மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் 15.09.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், அமைந்த அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதே போல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவும் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது மாநிலத்தில் ஆளும் திமுக கூட்டணி இந்த உள்ளாட்சி தேர்தலிலும் அப்படியே தொடரும் என்று தெரியவதுள்ளது.
இருப்பினும், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில், அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக போட்டியிடும் இடங்கள் குறித்தான இடப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணியும் பாஜக தரப்பில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேலு சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கருநாகராஜன், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் மீண்டும் பாமக வந்தால் மகிழ்ச்சியே என்று தெரிவித்தார். மேலும் திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால், பலமான கூட்டணி வேண்டும் என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"