ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவுக்கு பாடமாகவும் அதிமுகவுக்கு நஷ்டமாகவும் அமைந்துள்ளது.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்தித்து வந்த பாமகவுக்கு அந்த தேர்தல்களில் பெரியதாக ஒன்றும் வெற்றி வாய்ப்புகள் கிடைத்துவிட வில்லை.
2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்ட பாமக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதே போல, சட்டமன்றத் தேர்தலில் பாமக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த சூழலில்தான், இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஆட்சியை இழந்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக பாமக தலைமை அறிவித்தது. அதிமுக தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் பாமகவை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், பாமக தரப்பில், கூட்டணி தொடரும், ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று புது விளக்கம் அளித்தனர்.
பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதற்கு காரணம், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பாமக பலமாக உள்ள பகுதி என்பதால் அதிமுக துணை இல்லாமல் தனித்து போட்டியிடலாம் என்று முடிவு செய்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாமகவின் இந்த முடிவு துணிச்சலான நம்பிக்கையான முடிவு என்றாலும், பாமக ஒன்றை பரிசீலனை செய்யவில்லை. அது என்னவென்றால், ஆளும் கட்சியாக இருந்தபோதே அதிமுக கூட்டணியில் குறைவான இடங்களிலேதான் வெற்றி பெற முடிந்தது. இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள திமுக கூட்டணியில் இடம்பெற முடியாதபோது எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது தவறான முடிவு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
வேலூர் மாவத்தில் பாமக எதிர்பார்த்த அளவு வாக்குகளைப் பெறவில்லை. அதே நேரத்தில், கணிசமான அளவு மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் பாமக கூட்டணியில் இருந்திருந்தால் அதிமுக கூட்டணிக்கு போயிருக்கும் என்று கூறுகிறார்கள். கூட்டணியில் ஏற்பட்ட கடைசி நிமிட விரிசல்களால், இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலூர் மாவட்ட கவுன்சிலர் வார்டு எண் 8-க்கான காங்கிரஸ் வேட்பாளர் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 10,783 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் 6,731 மட்டுமே பெற்றார். 30,000 வாக்குகள் கொண்ட வார்டில் குறைந்தபட்சம் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை பெற்றுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் 1333 இடங்களில் பாமக 47க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிமுக 200 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மொத்தம் 140 மாவட்ட கவுன்சிலர்கள் இடங்களில் பாமக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பாமக வலுவாக உள்ள மாவட்டங்கள் என்பதால் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால், அக்கட்சி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இது பாமகவுக்கு ஒரு பாடம் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே போல, அதிமுக கூட்டணி கட்சியான பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது கூடுதலாக இடங்களைக் கொடுத்து தேர்தலை சந்தித்திருந்தால் இன்னும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அதிமுக அந்த முயற்சியை எடுக்காததால் அதிமுகவுக்கு நஷ்டம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமகவின் வெற்றி கவுரவமானது. மரியாதைக்குரியது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 47&க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னத்தில் நடைபெற்றத் தேர்தலில் பெருமளவில் பாமகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட, வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க.வின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தல்கள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால் கிராமங்களும், மக்களும் முன்னேறுவார்கள் என்பதால், அதற்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையையும், பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆற்றிய களப்பணிகளையும் ஒப்பிடும் போது ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.
ஆனாலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் பெறப்பட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளுக்கு பணத்தை வாரி இறைத்தன. வேட்பு மனுத் தாக்கலில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்கு பணிந்தது. பா.ம.க. வென்றிருக்க வேண்டிய பல இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. பா.ம.க. இப்போது வெற்றி பெற்ற இடங்களில் பலவற்றிலும் கூட முடிவுகளை மாற்ற முயற்சிகள் நடந்தன. அதை எதிர்த்து மாவட்டத் தேர்தல் அதிகாரி முதல் மாநிலத் தேர்தல் ஆணையர் வரை பல்வேறு நிலைகளிலும் போராடித் தான் முடிவுகளை அறிவிக்க வைக்க முடிந்தது. இவை அனைத்துமே போராடிப் பெற்ற வெற்றிகள் ஆகும்.
அந்த வகையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி பெற்றுள்ளவெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்ட போதிலும், ஆளும் திமுக, ஆட்சி செய்த அதிமுக ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியை பெற முடியாமல் போனவர்களும் நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தல்களில் பொதுமக்களின் ஒரே தேர்வு பாட்டாளி மக்கள் கட்சி தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.