சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவர்கள் கவனத்தைப் பெற்றார்கள்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை வரை கமல்ஹாசன் முன்னிலை வகித்தார், ஆனால் இறுதியில் தோல்வியைத் தழுவினார்.
அதே போல, ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து வரும் நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தலில், சுமார் 7% வாக்குகளைப் பெற்று அதிக வாக்குகள் பெற்ற 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த சூழலில்தான், நாம் தமிழர் கட்சி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி குறிப்பிடும்படியான வெற்றிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாம் தமிழர் கட்சி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், சட்டமன்ற தேர்தலில் கெத்து காட்டி சீமான் என்ன ஆனார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், `விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வென்றுள்ளதே?' எனக் கேட்டபோது, ``விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள். உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றிக்கு அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களின் செல்வாக்குதான் காரணம். எனவே, விஜய்க்காக மக்கள் வாக்கு செலுத்தினார்கள் என நான் நினைக்கவில்லை.
நாங்கள் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். இதனை படுதோல்வி என எப்படிக் கருத முடியும்? ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் கிடையாது. இதனை தோல்வி என களத்தில் நிற்கும் நாங்களே நினைக்கவில்லை. கோடிகளைக் கொட்டாமல் கொள்கைகளைப் பேசி இந்தக் கட்சிகள் களத்தில் நிற்குமா? தி.மு.க தனித்துப் போட்டியிடுமா? இன்றைக்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு தராவிட்டால், நாளை தருவார்கள். நாளை மறுநாள் தருவார்கள். 5 வருடங்கள் கழித்து இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள்” என்று கூறினார்.
அதே போல, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளன. இரு கட்சிகளும் இனி வரும் தேர்தல்களில் தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.