ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், ஐந்து மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் ஆட்சியை இழந்த அதிமுகவுக்கு இந்த தோல்வி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதிமுக யதார்த்தத்தை உணந்துள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவின் பலம் கொங்கு மண்டலத்தில் மட்டும்தானா? கொங்குவை தவிர்த்தால் அதிமுகவின் பலம் இவ்வளவுதானா என்று கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக அலை வீசும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்தபடி திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமைந்தது.
வட மாவட்டங்களில் ஸ்வீப் செய்த திமுகவுக்கு கொங்கு மண்டலம் சவலாகவே இருந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது. அதிமுக பெற்ற 66 இடங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்ற இடங்கள் ஆகும்.
சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெளியாகியுள்ள முடிவுகள் அதிமுக கட்சியின் கட்டமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அதன் தலைமைக்கு உணர்த்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்று பெரும்பால அரசியல் நோக்கர்களின் உறுதியான கருத்து. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான் இடங்கள்ல் வெற்றி பெற்றது. அப்போதே, அதிமுகவின் மீதான அதிருப்தியும் அதிமுகவின் பலவீனம் வெளிப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
தற்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுக தலைமைக்கு கட்சியின் அடிப்படை கட்டமைப்பு அதன் நெட்வோர்க்கை வலுப்படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியை மீட்டெடுக்கும் வகையில் அதிமுகவின் பலத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அறிந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தங்களின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அக்கட்சிகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் செயல்பாட்டாளர்கள் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். “ஜெயலலிதா போல செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாததால் அதிமுகவின் வாக்கு வங்கி குறையந்திருக்க வேண்டும் என்பதை இந்த கட்சிகள் உணர்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளில், கட்சியை இதே நிலையில் வைத்துக்கொண்டு கட்சியின் பலத்தை தக்கவைப்பது சவாலானது” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்கள்.
ஆனால், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அதிமுக இந்த சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டது. அதனால், அதிமுக வரும் காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என்று அதிமுக தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சென்னை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்பதை அதிமுகவினர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த 9 மாவட்டங்களில் மொத்தம் 54 தொகுதிகள் உள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாவட்டக்களில் அதிமுக 22 இடங்களைக் கைப்பற்றியது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் கட்சியின் பலத்தை விரிவுபடுத்தி, இந்த மாவட்டங்களில் அதன் கட்டமைப்பை மீண்டும் உறுதியாக கட்டியெழுப்ப வேண்டும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், பொது இடங்களில் உள்ள அதிமுக வேட்பாளர்களில் சுமார் 45% வேட்பாளர்கள் வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்கள் என 3 சமூகங்களைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றனர். இந்த அளவுக்கு திமுகவில் கூட அளிக்கப்படவில்லை என்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பலர், கட்சியின் செயல்திறன் பற்றிய எந்த விவாதமும் நடைபெறாததால் ஏமாற்றமடைந்தனர். அதற்கு பதிலாக, பேச அனுமதிக்கப்பட்ட அனைவரும் கட்சியின் பொன்விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடு நிகழ்ச்சி நிரலில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திமுகவை புகழ்ந்த அதிமுகவின் மூத்த தலைவர்களின் செயலுக்கு தனது ஆட்சேபனையை ராமநாதபுரம் முன்னாள் எம்பி அ.அன்வர் ராஜா வெளிப்படுத்தினார். அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் கட்சியின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் குறைபாடுகளை முன்னிலைப்படுத்த விரும்பினர் ஆனால், ஏன் இந்த திடீர் சமரசம் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவைத் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. இருப்பினும், முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு வழியே இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இந்த சூழலில்தான், 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பலமாக இருக்கிறது என்பதை நிரூபித்த அதிமுக மற்ற மாவட்டங்களில் பலத்தை இழந்துள்ளது என்பதே யதார்த்தமாக உள்ளது. அதனால், கொங்கு மண்டலத்தை தவிர்த்தால் அதிமுகவின் பலம் இவ்வளவுதானா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர்களில் அதிமுக 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதே போல, ஒன்றிய கவுன்சிலர்களில் 1333 இடங்களில் அதிமுக 200 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக பெற்றுள்ள வெற்றி என்பது திமுக பெற்ற இடங்களில் 5ல் ஒரு 1 பங்கு இடங்களையே பெற்றுள்ளது என்பதால் அக்கட்சி தனது கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றி விட்டது திமுக அரசு என்று விமர்சனம் செய்துள்ளது.
மேலும், “திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது என்றும் முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுகவிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளது. அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை” என்று பல குற்றச்சாட்டுகளை அதிமுக முன்வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“