உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கஇருப்பதையொட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
சட்டசபை இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள் முடிவுகளைப் போல உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு சவால்விடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கணிசமான வாக்குகளை முடிவடைந்த தேர்தல்களில் பெற்றிருக்கின்றன. தினகரனின் அமமுகவும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என கூறி வருகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 மேயர் பதவிகளும் அடங்கும். இதேபோல், 122 நகராட்சிகளில் 3500-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளும், 122 தலைவர் பதவிகளும் உள்ளன. மேலும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர் பதிவுகளும், 528 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 கவுன்சிலர் பதவிகளும், 388 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 12,524 ஊராட்சிகளில் 99,324 கவுன்சிலர் பதவிகளும், 12,524 தலைவர் பதவிகளும் உள்ளன.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக் கப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவுக்கு 79 வார்டுகளும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகளும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 89 வார்டுகள் விவரம் வருமாறு:-
வார்டு 2, 8, 9, 11, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 29, 30, 33, 34, 39, 42, 43, 44, 48, 49, 50, 51, 58, 61, 67, 68, 69, 75, 76, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 113, 118, 119, 122, 123, 125, 126, 128, 131, 132, 134, 136, 139, 140, 146, 147, 149, 150, 151, 152, 153, 158, 160, 161, 164, 167, 170, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 186, 187, 188, 191, 192, 193, 194, 197.
தாழ்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம் வருமாறு:-
வார்டு 3, 16, 18, 21, 22, 24, 31, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம் வருமாறு:-
17, 28, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.
மீதமுள்ள 79 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்து வந்த உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி உள்ளன. அரசியல் கட்சிகளும் அதை எதிர்கொள்ள ஆரம்ப கட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றன.
பதவிகள் அடிப்படையில் வார்டுகள் எவ்வாறு ஒதுக்கீடு :
பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு
மக்கள்தொகை அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு
பதவிகள் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற 6 வகையாக பிரித்து இடஒதுக்கீடு