தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை உரசிப் பார்க்கும் முதல் தேர்தலாக இருக்கும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு சவால் கொடுக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
2011ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஒன்பது மாத திமுக அரசின் ஆட்சியை உரசிப் பார்க்கும் முதல் தேர்தலாக இருக்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் 2 ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவை வீழ்த்தி பத்தாண்டுகளுக்கு பிறகு திமுகா ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலம் தழுவிய ஒரு தேர்தலை சந்திப்பது இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலே முதல் தேர்தலாகும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநராட்சி மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சிதலைவர்களைக் கவுன்சிலர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களை நடத்தும் வகையில் 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை திமுக ஆட்சியில் திருத்தம் செய்யவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 பேரூராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மேயர், துணை மேயர்கள், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு, உள்ளாட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரதிபலிக்கும் என்றால் இது திமுகவுக்கு கௌரவப் பிரச்சினையாக அமையும். ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமைந்துள்ளது. அதனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக அனைத்து இடங்களையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது.
மே, 2021ல் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 4 மாதங்களில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. அதில் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றது. ஆனால், தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது மு.க.டாலின் முதலமைச்சரான பிறகு 9 மாதங்கள் கழித்து வருகிற தேர்தல் என்பதால் ஸ்டாலினின் செயல்பாட்டை உரசிப் பார்க்கும் தேர்தலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்தாக இருக்கிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் புகழ் கைகொடுக்கும் என்று திமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக இருந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு சவால் கொடுக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“