Advertisment

கழிவுநீர் ஓடையில் அமையும் அணை; நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமையுமா?

ஒரு வருடத்தில் நூறு நிலச்சரிவுகளை சந்திக்கும் இந்த பகுதியில் அமைய இருக்கும் அணை, முழுக்கொள்ளவை தாங்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகம் தான் - மக்கள் கருத்து

author-image
Nithya Pandian
New Update
Local residents, environmentalists fear sillahalla hydroelectric project in Nilgiris

Local residents, environmentalists fear sillahalla hyderoelectric project in Nilgiris :  சமீபத்தில் மூணாற்றில் நடந்த பெட்டிமேடு நிலச்சரிவில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நீலகிரியில் இயற்கை சூழலும், இடர்பாடுகளும் எவ்வாறு மக்களை மாற்றுகிறது என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.

Advertisment

மண்சரிவுக்கு அளவுக்கு அதிகமான குடியேற்றங்களும், சரியான முறையில் விதிகளை பின்பற்றாமல் அமைக்கப்படும் கட்டிடங்களும் தான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது. 1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதில் 65% நிலச்சரிவுகள் மலை ரயில் செல்லும் பாதைகளில் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவலாஞ்சி, கூடலூர், மஞ்சூர், கீழ் குந்தா உள்ளிட்ட 283 இடங்களை நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம்.

மேலும் படிக்க : இன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம்: எச்சரிக்கும் காலநிலை மாற்றம்

2007 - 2008 இடைப்பட்ட காலத்தில் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO), குந்தா மின் நிலையம் 1-ல் இருந்து வெறும் 2 கி.மீ தொலைவில் சில்லஹல்லா (எமரால்ட் - காட்டுக்குப்பை) அணை கட்ட பரிந்துரை செய்து வருகிறது. இரண்டு அணைக்கட்டுகளையும் 4 சுரங்கவழிப் பாதைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த சில்ஹல்லா நீரேற்று மின் உற்பத்தி திட்டம் (Sillahalla Pumped Storage Hydro-Electric Project).

Local residents, environmentalists fear sillahalla hydroelectric project in Nilgiris மணலடா பகுதியில் அமைந்திருக்கும் விவசாய பூமியும் நீரோடையும் (Express photo by Nithya Pandian)

சில்லஹல்லா நீரோடையின் மீது 260 அடி உயரமுள்ள முதல் அணை கட்டப்படுகிறது. இரண்ஆவது அணை குந்தா அணைக்கு கீழே 350 அடி உயரத்தில் கட்டப்பட உள்ளது. மேல் அணையில் இருந்து 2.8 கி.மீ தொலைவிற்கு 10 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்க வழியில் மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து 1.56 கி.மீ தூரத்திற்கு மற்றோரு சுரங்கம் வழியாக கீழ் அணைக்கு நீர் கொண்டு செல்லப்படும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் சுமார் 315 ஹெக்டெர் அளவுள்ள காடு, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலம் நீரில் மூழ்கும். அணைக்கட்டுதலோடு அல்லாமல் இவை எமரால்ட் - அவலாஞ்சி நீர் தேக்கத்தோடும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் முத்தொரை பாலடா, கல்லக்கொரை, நுந்தளா, பாலக்கொலா, முதுகொலா, மணியட்டி, துளிதலை, தங்காடு, ஓரநள்ளி, மீக்கேரி பெம்பட்டி, கன்னேரி, மந்தனை உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்கும் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.  ரூ.4,952 கோடியில் (49.52 பில்லியனில்) இந்த அணை உருவாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை மாத இறுதியில் மத்திய நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு (Expert Appraisal Committee) உள்ளூர் மக்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

கழிவு நீரோடையில் அமைக்கப்படுகிறதா அணை?

”இந்த அணையை கட்டலாம் என்று ஏற்கனவே காமராஜர் காலத்தில் ஒரு பரிந்துரை இருந்தது. காட்டுக்குப்பை - சில்லஹல்லா பகுதியில் அமைய இருக்கும் இந்த அணை, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு சாக்கடை நீரோடை மேல் அமைய உள்ளது. ஆமாம் பெரும் மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது  மட்டுமே இந்த சில்லஹல்லா நீரோடையில் நீரோட்டம் இருக்கும். மற்ற நேரங்களில் குட் ஷெப்பர்ட் பள்ளியில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் மற்றும் உதகை புறநகர் பகுதியில் இருந்து சேகரம் ஆகும் அனைத்து கழிவு நீரும் இந்த ஓடையில் தான் கலந்து செல்கிறது.

இப்படியான தகவமைப்பு கொண்ட  நீரோட்டத்தின் மீது அணை கட்டி, நீரை தேக்கினால் பொதுமக்களுக்கு நோய் தொற்று தான் ஏற்படுமே தவிர இதனால் பயன் ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும்” என்கிறார் சிவலிங்கம். இவர் சில்லஹல்லா பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

Local residents, environmentalists fear sillahalla hydroelectric project in Nilgiris சில்லஹல்லா அணையுடன் இணைக்கப்பட இருக்கும் குந்தா ஆறு (Express photo by Nithya Pandian)

இந்த அணை கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து ஏதும் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும்,  இந்த நிலங்களுக்கான பட்டா கூட்டுப்பட்டாவாக இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் விஜயன். தனிநபர் பட்டா என்றால் கூட அவர்களுக்கு கிடைக்கும் இழப்பீட்டை ஏற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் கூட்டுப்பட்டா என்றால் அவர்களுக்கான இழப்பீடு எவ்வாறாக இருக்கும், இதனை அவர்கள் எவ்வாறு பங்கிட்டு தருவார்கள் என்ற கேள்வியும் நிலவி வருகிறது என்கிறார் அவர்.

மேலும் படிக்க : அழிவின் விளிம்பில் இருக்கும் பாண்டிச்சேரி வல்லூறுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

”இரண்டு அணைகள் மட்டுமில்லாமல் 8 கிராமங்கள் வழியாக செல்ல இருக்கும் 4 சுரங்கப்பாதைகள் மேலும் பயத்தையும் அச்சத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொன்றும் அளவில் பெரியவை மற்றும் மலைகளை குடைந்து உருவாக்கப்பட உள்ளவை. ஏற்கனவே குந்தா அணைக்கு அருகே கட்டப்பட்ட சுரங்கப்பாதைகள் அருகே அதிக அளவு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருக்கின்ற இடத்தில் 4 சுரங்கப்பாதைகள் கட்டுவது எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது என்கிறார் சிவலிங்கம்.

ஏற்கனவே இங்கே இருக்கும் அணைகள், மின்சார உற்பத்தி மையங்கள், சுரங்கபாதைகளை மறுசீரமைப்பு செய்தால் நம் தேவைக்கும் அதிகமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும். ஆனால் புதிதாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது அரசு என்கிறார்கள் பொதுமக்கள்.  தொடர்ந்து மக்கள் நடத்தி வந்த போராட்டம் மற்றும் எதிர்ப்புகளின் விளைவாக மத்திய அரசு “மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்றும், கூடுதலாக இந்த இடம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை (Environmental Impact Assessment) வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பதை அறிவிக்க இந்த திட்டம் குறித்த மேற்பார்வையை நடத்துமாறு தேசிய வன ஆணையத்திற்கும் ஊத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

காணாமல் போகும் வாழ்வாதாரம்

பெம்பட்டியில் இருக்கும் விவசாயி ஒருவரிடம் இது குறித்து பேசிய போது, இங்கு இந்த நிலங்களில் தேயிலையை தவிர்த்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்களை நாங்கள் பயிரிட்டு வருகிறோம். இந்த வயல் வெளிகளில் ஆயிரக்கணக்கான வடநாட்டவர் வேலை பார்த்து வருகின்றனர்.  இந்த கிராமங்கள் அனைத்தும் நீரில் மூழ்கினால் நாங்களும் வாழ்வாதாரத்தை இழப்போம். எங்களின் நிலங்களை நம்பி வந்த அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் 500 ஏக்கருக்கும் மேலாக இருக்கும் வனப்பகுதியில் கட்டுமானம் நடைபெறும் பட்சத்தில் வனவிலங்குகள் காடுகளில் இருந்து வெளியேறி மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதும் பிரச்சனையை உருவாக்கும் என்கிறார்.

Local residents, environmentalists fear sillahalla hydroelectric project in Nilgiris நீர் ஏற்றத்திற்காக குந்தாவில் கட்டப்பட்டுள்ள ராட்சச குழாய்கள் (Express Photo by Nithya Pandian)

இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே எமரால்ட் அணை கட்டுப்படுகின்ற சமயத்தில் அட்டுபாயில் கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் புதிதாக தங்களுக்காக அமைத்துக் கொண்ட பகுதி புது அட்டுபாயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மக்கள் பலருக்கும் பல்விதமான கருத்துகள் நிலவலாம். ஆனால் கூட்டுப்பட்டாவை வைத்துக் கொண்டு இழப்பீடு பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார் பெம்பட்டி கிராமத்தின் ஊர்தலைவர் அர்ஜூனன். எலஹள்ளா என்று ஆரம்பத்தில் நாங்கள் இந்த ஓடையை அழைப்போம். மனிதக்கழிவுகளை எடுத்துச் செல்லும் ஓடை என்பதால் தான் இதற்கு இப்படி ஒரு பெயர். முன்பு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் இங்கு தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது மழை காலங்களில் மட்டுமே இங்கு தண்ணீர் வரத்து இருக்கிறது. இதில் எவ்வாறு அணை கட்டுவார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. இது தொடர்பான முழுமையான விபரங்களையும் மக்களுக்கு அரசுதரப்போ மின்சாரத்துறையோ இதுவரை தரவில்லை என்கிறார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நீலகிரியில் இயங்கி வரும் அரசு சாரா அமைப்பான கி ஸ்டோன் பவுண்டேசனிடம் இந்த அணை குறித்து பேசிய போது, “இந்த இடம் முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லைக்கு 4 - 5 கி.மீ தொலைவில் அமைய உள்ளது. மின்வாரியத்துறை சமர்பித்த ஆவணங்களில் அங்கு எந்தவிதமான விலங்குகளின் வசிப்பிடம் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அழிக்கப்படும் போது நிச்சயமாக இதனால் வனவிலங்குகளின் வாழ்க்கை முறை முற்றிலுமாக பாதிப்படையும்.

தோடர்கள் மற்றும் படுகர்களின் வழிபாட்டு தலங்களும் புனித நிலங்களும் இங்கு அமைந்துள்ளது. இது அவர்களின் கலாச்சார பண்பாட்டினை கேள்விக்குறியாக்கும் ஒன்றாக அமைந்துள்ளது” என்று கூறியது.

2009ம் ஆண்டு நீலகிரியில் சராசரியாக ஏற்படும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை வெறும் 101 தான். ஆனால் இந்தியாவின் ஜியாலாஜிக்கல் சர்வே படி 2020ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 300. 2019 மற்றும் 2020 பெருமழை காலங்களில் அவலாஞ்சி பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இது போன்ற சூழல் இருக்கும் பகுதியில் அணை கட்டுவது என்பது மிகவும் ஆபத்தானது. மேலும் அணை கட்டி முடிக்கப்பட்டால், வெள்ள காலங்களில், முழு கொள்ளளவை எட்டிய பின்னர், நிலைத்து நிற்குமா என்ற கேள்விகளும் எழுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒன்றோடு ஒன்றாக இணைந்து உருவாகியிருக்கும் பாறைகளை உடைத்து சுரங்கங்கள் எழுப்பப்பட்டால் அது இந்த நிலத்தின் அமைப்பை மேலும் சீர் குலைக்க தான் செய்யும். அணையால் வரும் நன்மைகளைக் காட்டிலும் தீமையே அதிகமாக உள்ளது என்கிறார் நீலகிரியை சேர்ந்த ஹைட்ரோ - ஜியாலஜிஸ்ட் கோகுல் ஹலன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nilgiris Nithya Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment