தமிழ்நாடு ரயிலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளூர்வாசிகள் தாக்குகிற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பல நெட்டிசன்கள் இந்த தாக்குதலுக்கு ‘வெறுப்பு அரசியல்’ காரணம் என்றும், இது மற்ற மாநிலங்களில் பணிபுரியும் தமிழ் மக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பயணிகள் நெரிசல் மிக்க ஒரு ரயிலில் இரண்டு பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை துஷ்பிரயோகம் செய்து தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
அந்த வீடியோவில், பிரவுன் சட்டை அணிந்த ஒருவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கேட்க முடிகிறது. புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் எங்கே செல்வார்கள் என்று அவர் கேட்கிறார்.
புலம்பெயர்ந்தோரை அடிப்பதை நிறுத்துமாறு சக பயணிகள் அவரை வற்புறுத்தினாலும், அந்த நபர் ஒரு தொழிலாளியை அவரது தலைமுடியைப் பிடித்து, தொழிலாளர்களின் முகவர் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டு அவரை அடிக்கிறார். அவர் முன்னோக்கி செல்லும்போது, மற்றொருவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தாக்குகிறார். இந்த் சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் சரியாக தெரியவில்லை.
பல நெட்டிசன்கள் இந்த தாக்குதலுக்கு வெறுப்பு அரசியல்தான் காரணம் என்றும், இது மற்ற மாநிலங்களில் பணிபுரியும் தமிழ் மக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.
நடிகரும் பாஜக தலைவருமான குஷ்பு சுந்தர் இந்த தாக்குதலை மொழிவெறியுடன் தொடர்புபடுத்தியுள்ளார். “அரசியல் கதைகள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கத்தில் மொழியியல் பேரினவாதம் ஆதிக்கம் செலுத்தும் போது, இது கண்டிப்பாக நடக்கும். இந்த துரதிர்ஷ்டவசமானவர்களைத் தாக்குவதுதான் இந்த குண்டர்களின் வீரம். பிரதமரை துஷ்பிரயோகம் செய்தல், உடல் ரீதியான தாக்குதல் நடத்துவதுதான் இவர்களின் செயல். தமிழ்நாடு காவல்துறை செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த போக்கு தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும்” என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையால் மாநிலத்தின் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அருகே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 43 வயது புலம்பெயர்ந்த தொழிலாளியை ஒரு கும்பல் திருடன் என்று தவறாகக் கருதி அடித்துக் கொன்றனர்.
அந்த நபர் சுமார் ஆறு மாதங்களாக ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரிந்தவர். இரவு உணவிற்கு வெளியே வந்திருந்தபோது, அவரது தங்கி இருந்த இடத்திற்கு திரும்பிச் செல்லும் வழியை மறந்ததால், அவரால் தமிழில் வழி கேட்க முடியாததால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உள்ளூர் மக்களுக்கு புரியவில்லை. போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர்கள் அவரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர், அங்கு அவர் படுகாயமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“