ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்படும். ஹோட்டல்கள், விடுதிகள், மற்ற தங்கும் விடுதிகள் உள்ளிட்ட சேவைகள் தொடங்கலாம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள 4வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் ( மே 31ம் தேதி) தேதி முடிவடைய இருந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்படும். ஹோட்டல்கள், விடுதிகள், மற்ற தங்கும் விடுதிகள் உள்ளிட்ட சேவைகள் தொடங்கலாம். என 5ம் கட்ட ஊரடங்கில், அன்லாக் 1 என்று 3 கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி 4-வது கட்ட பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம்,இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை பரிந்துரை செய்ததையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் ஜூன் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது. இந்த 5வது கட்ட பொதுமுடக்கத்தில், மத்திய அரசு அன்லாக் 1 என்று 3 கட்ட பொது முடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொது முடக்கம் தொடரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அன்லாக் 1.O: ஜூன் 8ம் தேதியிலிருந்து முதல் கட்ட தளர்வுகள்
ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்படும்.
ஹோட்டல்கள், விடுதிகள், மற்ற தங்கும் விடுதிகள் உள்ளிட்ட சேவைகள் தொடங்கலாம்.
வணிக வளாகங்கள் (Shopping Malls)செயல்படும்.
மேற்கண்ட செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த இந்த இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அன்லாக் 1.O: இரண்டாம் கட்ட தளர்வுகள்
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், கல்வியியல் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில் ஜூலை மாதம் திறப்பது பற்றி முடிவெடுக்கலாம்.
அன்லாக் 1.O: மூன்றாம் கட்ட தளர்வுகள்
கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல் நிலைமையின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த பயணங்கள் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து, தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும்.
அதே போல, நிலைமையின் அடிப்படையில், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்குகள், பார்கள், கலை அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேரங்களில் அத்தியாவசியப் பணிகள் தவிர, தனிமனிதர்கள் வெளியில் செல்வது 144 தடை உத்தரவின்படி தடை செய்யப்பட்டுள்ளது.
பொது முடக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பரிசீலைனை செய்து அதன் அடிப்படையில் வரையறை செய்யப்படும்.
கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் நடைபெற அனுமதிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுடியில் இருந்து யாரும் வெளியே செல்லவோ வெளியே இருந்து உள்ளே செல்லவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவை, அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ காரணங்களுக்காக தீவிர தொடர்புகள் தடம் அறியப்படும். வீடுவீடாக கண்காணிக்கப்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.