பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விக்னேஷ் ஏப்ரல் 19ஆம் தேதி உயிரிழந்தார்.
விக்னேஷ் வலிப்பு வந்து உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய குடும்பத்தினர், போலீசார் விசாரணையின்போது விக்னேஷை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதால்தான் விக்னேஷ் உயிரிழந்ததாக புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் விக்னேஷை துரத்திச் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், விக்னேஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விக்னேஷ் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, விக்னேஷின் மரணம் குறித்து அவருடைய குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். விக்னேஷின் மரணத்தை மறைக்க, காவலர்கள் மறைமுகமாக 1 லட்சம் ரூபாய் கொடுத்ததாக விக்னேஷின் சகோதரர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் மரணம் தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக, அவருடைய உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உடற்கூறாய்வு அறிக்கையில், விசாரணைக் கைதி விக்னேஷ் உடலில் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்னேஷ் தலையில் 1 செ.மீ அளவுக்கு ஆழமான காயம் உள்ளதாகவும், இந்த காயம் போலீஸ் லத்தி மற்றும் கம்பால் தாக்கியதால் இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"