ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பயிர்களைத் தாக்கி வரும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்கு வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. எதனையும் எதிர்கொள்ள, முன்கூட்டியே, வெட்டுக்கிளிகள் அச்சுறுத்தலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனையை தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நடந்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் வரும் நாட்களில் கீழ்நோக்கிய காற்றின் திசையில் நகரும் என்பதால் தமிழகத்திற்கு அச்சத்தை எழுப்பியுள்ளன. தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் கூட்டம் வருமா என்ற நிலையில், வரலாற்றை மேற்கோள் காட்டி, ஜோத்பூரில் உள்ள வெட்டுக்கிளி எச்சரிக்கை மையத்தின் உறுதிப்படுத்தலுடன், மாநில வேளாண்மைத் துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உறுதியளிக்கின்றனர். இருப்பினும், எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள, முன்கூட்டியே, வெட்டுக்கிளிகள் அச்சுறுத்தலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனையை தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்குதல் குறித்து, இந்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் வெட்டுக்கிளி எச்சரிக்கை மையத்தின் விஞ்ஞானிகளுடன் தமிழக அரசு விவாதித்துள்ளது. அவர்கள், வெட்டுக்கிளிகள் விந்தியமலை சாத்புரா மலைகளைக் கடக்காது என்று உறுதியளிக்கின்றனர். கடந்த காலத்தில், வெட்டுக்கிளிகள் தக்கான பீடபூமியைத் தாண்டவில்லை. அதனால், தமிழகத்தில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு மிகவும் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்றும் இருப்பினும், வெட்டுக்கிளி கூட்டத்தின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வரு மாநில அரசின் அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் இதுவரை 33 மாவட்டங்கள் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேற்கு ராஜஸ்தான் மாவட்டங்களைத் தாக்கிய வெட்டுக்கிளிகள், காற்று ஓட்டம் காரணமாக, இப்போது ஜெய்ப்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் பரவியுள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் தாகுதல் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மே மாத ஆரம்பத்தில் தொடங்கியுள்ளது.
வெட்டுக்கிளிகள் தாக்குதலால், ராஜஸ்தானில் இதுவரை 6.70 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.1000 கோடி மதிப்புள்ள பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் அறுவடை கட்டத்தில் பயிர்களின் இருப்பிடத்தை அறிந்து காற்றின் திசையில் கூட்டமாக பறக்கும். பின்னர், அவை பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
வெட்டுக்கிளிகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாலைவனப் பகுதிகளிலிருந்து உருவாகின்றன. ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு பாலைவன வெட்டுக்கிளி கூட்டம் நான்கு கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்டுள்ளது. அவை ஒரே இரவில் 80,500 கிலோ வரை பயிர்களை சாப்பிட்டு அழிக்கும் என்று கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.