வட மாநிலங்களில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஒருவேளை தமிழகத்திற்கு வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் உள்ளோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை கூறினார்.
தமிழக வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஊடகங்களில் நிறைய வெட்டுக்கிளிகள் பற்றி செய்திகள் வருகின்றன. அந்த வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டிற்கு வருமா என்பது நிறைய பேருக்கு அச்சமாக இருக்கிறது. இது சம்பந்தமாக சில தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க உள்ளேன். இன்று முதல்வருடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் துறைசார்ந்து சில தகவல்களை நாங்கள் கூறியிருக்கிறோம். அடிப்படையில் அது என்னவென்றால், தற்போது வட மாநிலங்களில் இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள். இது உள்ளூர் வெட்டுக்கிளிகள் மாதிரி கிடையாது. ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த வெட்டுக்கிளிகள், ஈரான், ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ராஜஸ்தான் மாநிலத்தில் காணப்படுகிறது. இதுவரை 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர இந்த வெட்டுக்கிளிகள், ராஜஸ்தான் தவிர மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசத்தில், ஜான்ஸி பகுதி, தெற்கு பஞ்சாப், மகாராஷ்டிராவில் நாக்பூர், அமராவதி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசும் ஜோத்பூரில் உள்ள வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பும் எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளதா என்று வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு விஞ்ஞானிகளிடமும் மதிய அரசு அதிகாரிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்கள் நேற்று அளித்த பரிந்துரையில், பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும். ஆனால், ராஜஸ்தான், பீகார், ஒடிசாவில் மாநிலங்களில் இருக்கும்.
பாலைவன வெட்டுக்கிளிகள் தென்னிந்தியா பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கிற வெட்டுக்கிளிகள் உள்ளூர் வெட்டுக்கிளிகள். அவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை. தமிழகத்தில் 250 வகையான வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. இதில் 40-50 வகை வெட்டுக்கிளிகள் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகளாக இருக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஒருவேளை தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளிகள் வந்தால் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநில எல்லைகளை அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம்.
வெட்டுக்கிளிகள் வந்தால், அதனைக் அழிக்க மருந்து தெளிப்பு கருவிகள், மருந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் ஒரு சிறிய அளவில் கூட்டம் வந்தால், விவசாய நிலத்தில் இருந்தால், உடனடியாக பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க கூடாது. வேம்பு அடிப்படையிலான மருந்துகளை அடிக்க வேண்டும். வெட்டுக்கிளிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால், மெலத்தியான், குளோர்பைரிபோஸ், லெம்டாஸ் சைக்ளோதெரின் என்ற மூன்று வகையான மருந்துகளைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்கலாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்காமல் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை ஆலோசித்து இந்த முடிவை எடுக்க வேண்டும்.
வடமாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் வரும்போது அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அந்த வெட்டுக்கிளிகள், இரவில் பறக்காது. அப்போது, அதிகாலை 3-4 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்து கட்டுப்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய மெலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 10,000 லிட்டர் போதுமானதாக இருக்கிறது. இருப்பினும், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. அதனால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ஏதேனும் புதிதாக வெட்டுக்கிளிகள் இருப்பதை விவசாயிகள் பார்த்தால், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். உழவன் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம்.” என்று வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.