சோபியா பாஸ்போர்ட் பறிமுதல் : கனடாவில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வரும் மாணவி சோபியா ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சோபியா கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸில் பயணித்து வந்தார்.
இவர் பயணித்த விமானத்தில் தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் பயணித்து வந்தார். அப்போது விமானத்தில் “பாஜக பாசிச ஆட்சி ஒழிக” என்று முழக்கமிட்டிருக்கிறார் சோபியா.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சோபியா மீது வழக்கு பதிவு செய்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். அந்த வழக்கின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். அப்போது சோபியா பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
சோபியா பாஸ்போர்ட் : புதிய பாஸ்போர்ட்டை சமர்பிக்க சம்மன்
பறிமுதல் செய்யப்பட்டது பழைய பாஸ்போர்ட் என்பதால் புதிய பாஸ்போர்ட்டினை வெள்ளிக்கிழமை கொண்டு வந்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சோபியாவின் அப்பா சாமிக்கு காவல் துறை சம்மன் அனுப்பியது.
பழைய பாஸ்போர்ட்டினை காவல் துறை திருப்பி தர வேண்டி கோர்ட்டில் மனு சோபியா சார்பில் நேற்று (06/09/2018) அன்று தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஏற்கனவே என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட என்னுடைய பழைய பாஸ்போர்ட்டினை காவல் துறையினர் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அதில் தன்னுடைய அமெரிக்க விசா இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சோபியா.
இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு திங்கள் அன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.